வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமானால் ரூ.1.80 லட்சம் கோடி தேவைப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
70 ஆண்டுகளில் இல்லாத அளவு இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு போதுமான அளவு இல்லாததால், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதில் அந்நாடு பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது. இதனால், அந்நாட்டில் பல்வேறு பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி, பருப்பு, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்ந்து, மக்கள் வாழ வழியின்றி ஒரு வேளை உணவுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் ஆளும் குடும்ப அரசுக்கு எதிராக இலங்கை வாழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கையில் புதிய பிரதமர் பதவியேற்று அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்ய புதிய அமைச்சரவை முயற்சி மேற்கொண்டுள்ளது.
3 மாதத்திற்கு பின் கடும் உணவு பஞ்சம் ஏற்படும்... பிரதமர் அறிவிப்பால் அதிர்ச்சி!!
இதனிடையே, இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு(இலங்கை மதிப்பில் ரூ.1.80 லட்சம் கோடி) நிதி தேவைப்படுவதாக கூறினார். இதில், 3.5 பில்லியன் டாலர் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கே தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கலங்கி நிற்கும் இலங்கை: இந்தியாவிடம் மேலும் பெட்ரோல், டீசல் உதவி கேட்கிறது
இடைக்கால பட்ஜெட் தயாராகி வருகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மை மட்டும் போதுமானது அல்ல என தெரிவித்த ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பையும் மாற்றி அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக தெரிவித்துள்ளார்.