கொழுப்பில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் பர்தா அணிந்த பெண் ஒருவரும் ஈடுபட்டதாக அறியப்பட்ட நிலையில் இனி இலங்கையில் இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிய தடைவிதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தலைநகர் கொழும்புவில் பயங்கரவாதிகள் கடந்த ஞாயிறு அன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 9 பேர் அதில் ஒருவர் பெண் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்தியவர்கள் உள்ளூர் தீவிரவாதிகள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் பெண்கள் இருந்ததாகவும், அவர்கள் பர்தா அணிந்திருந்ததால் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இலங்கையில் பெண்கள் பர்தா அணிய தடை வித்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் இன்று நடைபெறும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இது தொடர்பாக அதிபர் சிறிசேனா பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.