கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார்
கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டதையடுத்து, தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள பாஜக, 1974 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக விமர்சித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது.
“கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை.” என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். “காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் இந்த விவகாரத்தை அணுகியுள்ளன.” என வெளியுறவுத்துறை அமைச்ச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சத்தீவை மீட்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: இந்தியா மீண்டும் திட்டவட்டம்!
“கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை. இந்தியாவிடம் இருந்து அப்படி ஒரு கோரிக்கை இல்லை. அப்படி தொடர்பு இருந்தால், இலங்கை வெளியுறவுத்துறை அதற்கு பதில் அளிக்கும். இலங்கையைப் பொறுத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.” என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க பாஜக என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளது என்றார்.