Sri Lanka Crisis: என்ன நடந்தாலும்...அதிபர் பதவி விலக மாட்டார்.. இலங்கையில் மீண்டும் பரபரப்பு..

By Thanalakshmi V  |  First Published Apr 6, 2022, 12:13 PM IST

எந்த சூழ்நிலையிலும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலக மாட்டார் என்று இலங்கை நாடாளுமன்றத்தின் அரசு கொறடா தெரிவித்துள்ளார்.
 


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அமைச்சரவை மாற்றியமைப்பு, அரசுக்கான ஆதரமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் திரும்ப பெற்றது, பெரும்பான்மை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் நேற்று தொடங்கியது.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து ஆளுங்கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்த நிலையில், காபந்து அரசில் அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபட்சே அழைப்பு விடுத்தார்.

Tap to resize

Latest Videos

ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. மேலும் முக்கிய எதிர்க்கட்சியான எஸ்ஜேபி, அதிபரும் பிரதமரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். அதற்கு எதிராக நாங்கள் செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளது.26 அமைச்சர்கள் ராஜினாமாக செய்த நிலையில் புதிதாக 4 அமைச்சர்களை அதிபர் நியமித்துள்ளார். அதில் நிதியமைச்சராக பதவியேற்ற அலி சப்ரி, பதவியேற்ற 24 மணி நேரத்தில் ராஜினாமா செய்துள்ளார். இச்சூழலில் தற்போதைய கோத்தபய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக 41 எம்.பிக்கள் அறிவித்துள்ளனர்.

இனி அவர்கள் நாடாளுமன்றத்தில் சுயேட்சைகளாக செயல்படவுள்ளனர். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று தற்போதைய அரசு பதவி விலக வேண்டும். நிலைமையை சமாளிக்கும் திறன் கொண்ட வேறு ஒரு குழுவிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் குறைந்தது 113 எம்.பிக்களின் ஆதரவு இருந்தால் தான் ஆட்சியை தொடர முடியும்.  கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கோத்தபய ராஜபட்சேவின் கூட்டணி 150 இடங்கள் பிடித்து ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக 41 எம்.பிக்கள் தங்களது ஆதரவை திரும்ப பெற்றுள்ளதால், நாடாளுமன்றத்தில் ராஜபட்சேவுக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 113 ஆக குறைந்துள்ளது. எனினும், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாக ஆளும் கூட்டணி தெரிவித்துள்ளது.

ஆனால் ராஜபட்சே ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் பட்சத்தில், ஆட்சியை இழக்க அதிகவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நீருப்பிக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க தயாராக இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபட்சே தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலக வேண்டும் எனறும் மிக பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும், இன்று காலை கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் , எந்த சூழ்நிலையிலும் அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலக மாட்டார் எனவும் பிரச்சனையை எதிர்க்கொள்ள தயாராக இருப்பதாகவும் அரசு கொறடா அறிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க சுமுகமான முடிவை எடுக்குமாறு ஐ.நா வலியுறுத்தியுள்ளது. நாட்டில் போராடி வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது சரியல்ல என்றும் எதிர்க்கட்சிகள், பல்வேறு சமூக அமைப்புகளுடன் அரசு ஆலோசனை நடத்தி அமைதி ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

click me!