கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை நிதி சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் தூதரகங்களை மூட முடிவு செய்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை நிதி சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் தூதரகங்களை மூட முடிவு செய்துள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடன் அதிகமாகி, அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்துபோனதால் இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இலங்கை கூடுதலாகக் கடன் வாங்குகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பால், சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளன.
நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன. இதனால் நீண்ட நேர மின்வெட்டும் ஏற்படுகிறது. டீசல் கிடைக்காததால், பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக 13 மணி நேர மின்வெட்டுக்குள்ளாயினர். இந்த நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டன. இந்த பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறியதாக, ஜனாதிபதி பதவி விலகக் கோரி நேற்று முன்தினம் இரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து, அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, தடியடி நடத்தினர்.
இந்த போராட்டத்தை அடுத்து, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பித்துள்ளார். இதனிடையே நார்வே, ஆஸ்திரேலியா, ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள தூதரகங்களை மூட உள்ளதாக இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. நார்வேயின் ஓஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஈராக்கின் பாக்தாத் நகரங்களில் உள்ள தூதரகங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் மூட இலங்கை வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது. நிதி சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் தூதரகங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.