கொரோனா வைரஸ்- கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளைப் புரட்டிப்போட்ட ஒன்றாக இதுவே உள்ளது. இதனால் வளர்ந்த நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்து நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
சீனாவில் கொரோனா :
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால் இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மற்ற நாடுகளை மிக மோசமாகப் பாதித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் கூட இதிலிருந்து தப்பவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக அமெரிக்க பொருளாதாரம் கடந்த 2020 சரிந்தது.
இந்நிலையில், சீனாவின் பெரிய நகரமான சுமார் 2.6 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காயில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால், அமலில் உள்ள முழு ஊரடங்கை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஷாங்காய் நகரில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
ஷாங்காயில் ஊரடங்கு :
இதன் மூலம் ஷாங்காயில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஷாங்காய் நகரில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுமார் 10 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களை சீன அரசு அங்கு அனுப்பி உள்ளது. இதில் 2,000 பேர் ராணுவ மருத்துவப் பணியாளர்கள். இதற்கிடையே, தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உணவு இல்லாததால் மக்கள் அவதி :
நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவது சீன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் தவிர்த்து வருகின்றனர். ஷாங்காயில் உள்ள 2.6 கோடி மக்களுக்கு உணவு,தண்ணீர் உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இருப்பதால், அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இருப்பினும் சீன அரசு, தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறிகள்,உணவுகள் போன்றவற்றை விநியோகித்து வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், 2.6 கோடி மக்களின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.