இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்போதைய அமைச்சரவையை கலைத்துவிட்டு காபந்து அரசை அமல்படுத்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணி கட்சிகள் அதிபர் கோத்தபய ராஜபட்சேயிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பண வீக்கம், நிதி பற்றாக்குறை, அந்நிய செலாவணி குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பொருளாதார நெருக்கடியால், நாடு முழுவதும் அனைத்தும் பொருட்களின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு மக்களால் முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதனால் மக்கள் ஒரு நாளைக்கு இரு வேளை உணவு முறைக்கு மாறி வருகின்றனர்.
அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், வெளிநாடுகளில் பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய முடியாமல், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பால் பவுடர், கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களின் விலையும் உச்சத்தை எட்டியுள்ளன. இதனால் நாட்டில் உணவு பொருட்களின் பதுங்கலை தடுக்க, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 18.7 % ஆக இருந்ததாகவும்,உணவுப் பணவீக்கம் 30.2% ஐ எட்டியுள்ளது. இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் நிதி பற்றாக்குறை 2020 ஆம் ஆண்டில் 5 % ஆக இருந்த நிலை 2021 ல் 15% ஆக அதிகரித்தது. 2021 நிதியாண்டில் மூன்றாவது காலாண்டின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 1.5% ஆக இருந்தது.
இந்தியாவிலிருந்து 500 மில்லியன் டாலர் கடன் வரியின் கீழ் டீசல் சனிக்கிழமை இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டாலும், மே மாதம் வரை இந்த நிலை தொடரும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.மேலும் இலங்கை தலைநகர் கொழும்பில் இந்த வாரம் முழுவதும் மின்வெட்டு அமலில் இருப்பதால், கொழும்பு பங்குச் சந்தை (CSE) தினசரி வர்த்தகத்தை வழக்கமான நான்கரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு நாட்டின் வரி விதிப்பு முறையில் செய்த மாற்றமே காரணம் என்று கூறப்படுகிறது. 15% இருந்து 8 % ஆக வரி குறைக்கப்பட்டதனால், நாட்டில் வரி வருவாய் அடி வாங்க துவங்கியது. மேலும் போதிய ஆய்வின்றி இயற்கை விவசாயத்தை அரசு நடைமுறைபடுத்தியதால், இலங்கயில் நன்கு விளையும் தேயிலை, மிளகு, ஏலம், காய்கறி உற்பத்தி சுமார் 30% குறைய தொடங்கியது. இலங்கை வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடனின் அளவு 51 பில்லியன் டாலர். அதில் உடனடியாக திருப்பி கொடுத்தாக வேண்டிய கடனின் மதிப்பு 7 பில்லியன் டாலர். ஆனால் அந்நிய செலாவணி கையிருப்பு 2 பில்லியன் டாலர் மட்டுமே இருக்கிறது. அதுவும் அன்றாட இறக்குமதிக்கு அளிக்ககூட போதவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளொன்று 13 மணி நேரம் மின்வெட்டு அமல் படுத்தப்பட்டுள்ளதால் ,அத்திரமடைந்த மக்கள் அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலக வேண்டும் என்று கூறிய அவரது வீட்டின் இல்லம் முன்பு நேற்று இரவு போராட்டத்தில் இறங்கினர். நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று அதிபர் கோத்தபய ராஜபட்சே, பிரதமர் மகிந்த ராஜபட்சே, விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜ பட்சே ஆகியோருக்கு எதிராக இலங்கை மக்கள் சமூக வலைதளங்களில் கடும் கோபத்தை வெளியிட்டு, பதிவுகள் போட்டு வருகின்றனர்.இந்நிலையில் இலங்கை அரசை கலைத்துவிட்டு, காபந்து அரசாங்கத்தை அமைக்க கூட்டணி கட்சிகள் அதிபரி கோத்தபய ராஜபட்சவிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.