Ukraine : ‘வெந்து தணியும் உக்ரைன்’ ஒருவழியாக முடிவுக்கு வரும் போர்.. இதற்கு மட்டும் சம்மதிப்பாரா புடின்..?

By Raghupati R  |  First Published Apr 1, 2022, 6:22 AM IST

ரஷிய படைகளின் தொடர் தாக்குதலால் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. அங்கு 90 சதவீதத்துக்கும் மேல் கட்டிடங்கள் இடிந்துள்ளன. 


உக்ரைன் - ரஷியா போர் :

4 லட்சம் பேர் வசித்த அந்நகரில் இருந்த மக்கள் வெளியேறியுள்ள நிலையில் இன்னும் 1.60 லட்சம் பேர் சிக்கி உள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பசி, பட்டினியுடன் உயிர் பயத்தில் கட்டிடங்களின் அடித்தளங்களில் தங்கி உள்ளனர். 

Tap to resize

Latest Videos

மரியுபோல் நகரில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்களை ரஷிய படைகள் தடுத்து வருவதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. இந்தநிலையில் மரியுபோல் நகரில் பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக மனிதாபிமான அடிப்படையில் இன்று போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.

போர் நிறுத்தம் : 

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, மரியுபோல் நகரில் இருந்து ஜபோரிஜியாவுக்கு ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள பெர்டியன்ஸ்க் துறைமுகம் வழியாக மக்கள் வெளியேற மனிதாபிமான பாதை செயல்படுத்தப்படும். இதற்காக மரியுபோலில் இன்று போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது தொடங்கப்பட்ட தாக்குதலின் முதல் நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை ரஷிய படைகள் கைப்பற்றியது. செர்னோபில் அணு உலை மீது பயங்கரவாத அமைப்புகளும் தேசியவாத குழுக்களும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால் அணு உலையை பாதுகாத்து அதை கைப்பற்றி உள்ளதாக ரஷியா தெரிவித்தது. ஆனால் அணு உலையை ரஷியா கைப்பற்றியதால் கோடிக்கணக்கான உயிர்கள் ஆபத்தில் உள்ளது என்று உக்ரைன் தெரிவித்தது.

மீண்டும் பேச்சுவார்த்தை :

இந்தநிலையில் செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷிய படைகள் வெளியேற தொடங்கி உள்ளன என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் தொடங்கியது முதலே மறுபுறம் இரு நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இடையே துருக்கியில் இன்று இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு எட்டப்படவில்லை. ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேருக்கு நேர் சந்திக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் போர் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!