காய்ச்சல், கோவிட் பாதிப்பு அதிகரிப்புக்கு மத்தியில் மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் மாஸ்க் அணிவதை ஸ்பெயின் அரசு கட்டாயமாக்கி உள்ளது
2019-ம் ஆண்டின் இறுதியில் முதன்முதலில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என பரவிய பெருந்தொற்றால் உலகம் முழுவதுமே முடங்கியது. இதனை தொடர்ந்து தடுப்பூசி பயன்பாட்டின் காரணமாக கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. உலக நாடுகள் கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.
எனினும் அவ்வப்போது உருமாறிய கொரோனா வைரஸ்கள் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில் டெல்டா, ஒமிக்ரான் வகை உருமாறிய மாறுபாடுகள் பேரழிவுகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஒமிக்ரானின் துணை வகையான ஜே.என்.1 மாறுபாடு காரணமாக மீண்டும் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் பல நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்பெயினில் உள்ள சுகாதார மையங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஸ்பெயினின் சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர் “ மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்கும்” என்று தெரிவித்தார்.
அதன்படி ஸ்பெயினில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் மாஸ்க் அணியுமாறு சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும் தனியார் கிளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் பல் மருத்துவர் அலுவலகங்கள் போன்ற பிற மருத்துவ வசதிகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினின் பல பிராந்தியங்களில் ஏற்கனவே கடந்த வாரம் மருத்துவமனைகளில் நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மாஸ்க் அணியுமாறு உத்தரவிட்டனர். ஸ்பெயினின் மத்திய அரசாங்கம் திங்களன்று நாடு முழுவதும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று முன்மொழிந்தது. எனினும் இரண்டு வாரங்களுக்கு நோய்த்தொற்றுகள் குறைந்தால் கட்டாய மாஸ்க் அணியும் உத்தரவை நீக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து மாஸ்க் விதிமுறை கைவிட்ட கடைசி ஐரோப்பிய நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும், பிப்ரவரி 2023 வரை பொதுப் போக்குவரத்திலும், ஜூலை வரை சுகாதார மையங்கள் மற்றும் மருந்தகங்களிலும் மாஸ்க் அணியவேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. .