ரஷ்யாவின் ஜி. ஆர்.யூ என்ற ரகசிய பிரிவு ரஷ்யாவின் எதிரிகளை ரகசியமாக கொள்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளின் மீது கொடூர தாக்குதல் நடத்த ரஷ்ய உளவு பிரிவு தாலிபன்களுக்கு பணம் கொடுத்திருப்பதாக, அமெரிக்க உளவு பிரிவு அறிக்கை தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அந்நாட்டு அரசுக்கும் தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதிலிருந்து ஆப்கனிஸ்தான் அரசு படைக்கு அமெரிக்க ராணுவம் பக்கபலமாக இருந்து தாலிபான்களை எதிர்த்து வருகிறது. முடிவில்லாமல் நீண்டு வரும் இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்கனிஸ்தான் அரசு உதவியோடு தாலிபன் பயங்கரவாதிகளுடன் அமெரிக்க அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முன்வைத்த நிபந்தனைகளை தாலிபன் பயங்கரவாதிகள் ஏற்று கொண்டதாக கூறப்பட்டது. தாலிபன்கள் தரப்பிலும் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டது, அமெரிக்காவும் அதை ஏற்று கொள்ள தயாராக இருந்த நிலையில், திடீரென ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் பலியாயினர்.
அதனையடுத்து அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தையை ரத்து செய்தார். இந்நிலையில் மீண்டும் கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட ட்ரம்ப் தாலிபன்களுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கினார். அப்போது இருதரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்க உறுதியளித்தது. அதனடிப்படையில் ஆப்கனிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை 2500 ஆக குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதேபோல் தாலிபன்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தில், அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற எந்த பயங்கரவாத அமைப்புகளையும் ஆப்கானிஸ்தானில் அனுமதிக்க மாட்டோம், என அதன் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அதனையடுத்து ஓரளவுக்கு அந்த பிரச்சினை சுமுகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும், 1500 முதல் 5 ஆயிரம் பேர்கொண்ட ராணுவத்தை அமெரிக்கா ஆப்கனிஸ்தானில் இன்னும் வைத்திருக்கிறது.
இந்நிலையில் கடந்த 1980-களில் சோவியத் யூனியன் சந்தித்த பின்னடைவுகளுக்குப் பின்னர், ஆப்கனிஸ்தானில் உள்ள தாலிபன்கள் மற்றும் ஆயுதமேந்திய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து பல ஆண்டுகளாக மாஸ்கோ விலகியே இருந்தது. ஆனால் சமீப காலங்களாக தாலிபன் தீவிரவாதிகளிடம் ரஷ்யா வழங்கிய சிறிய வகை ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இது குறித்து அறிக்கை ஒன்றை தயாரித்துள்ள அமெரிக்க உளவுத்துறை, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்த தாலிபன்களுக்கு ரஷ்ய உளவு பிரிவு பணம் கொடுத்துள்ளது என அதில் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் அமெரிக்க வீரர்கள் மீதான தாக்குதலை ரஷ்யா ஊக்கப்படுத்துவதுடன், அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான ஜி.ஆர்.யூ அதில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்த படைகளையும் பின்வாங்க பென்டகனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. மார்ச் முதல் ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் ஆப்கனிஸ்தானில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது குறித்து உளவு அமைப்பு வெள்ளை மாளிகைக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
உயர்மட்ட அதிகாரிகள் அளவில் இது தொடர்பான ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து வெள்ளை மாளிகையின் மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் பென்டகன் ஆகியவை கருத்துக்கூற மறுத்துள்ளன. ரஷ்யாவின் ஜி. ஆர்.யூ என்ற ரகசிய பிரிவு ரஷ்யாவின் எதிரிகளை ரகசியமாக கொள்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது என மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன. இந்த தகவல் உண்மை என்றால் இது ரஷ்யாவில் மூர்க்கத்தனமான நடத்தை என்று வெள்ளை மாளிகையின் வெளியுறவு குழு உறுப்பினர் பிரதிநிதி டெட் லி கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து அமெரிக்க அதிபர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமெரிக்க படை வீரர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்துகிறார் என ஆதங்கம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்ட பாதுகாப்பு அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர், தாமஸ் ஜோஸ்லின், அமெரிக்க துருப்புக்களைத் தாக்க ரஷ்யா, தாலிபன்களுக்கு பணம் செலுத்துகிறது என்பது ஆச்சரியப்படும் விஷயமல்ல என கூறியுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தலிபான்களை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் அரவணைக்க மாஸ்கோ விரும்பியது என்று அவர் கூறினார், தாலிபன் பயங்கரவாத அமைப்பின் தூதர்கள் சமீபத்திய ஆண்டுகளில் மாஸ்கோவிற்கு பயணம் செய்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.