அப்போது அவர் தியாகி ஆகிவிட்டார். அமெரிக்கபடை நாட்டிற்குள் நுழைந்தபோது பாகிஸ்தானியர்களாக அன்று நாங்கள் அவமானப்பட்டதை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என இம்ரான் கான் உணர்ச்சி பொங்க கூறினார்.
ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தியாகியாக்கியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்கு எதிர் கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவுத்துறை, பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாகிவிட்டது, குறிப்பாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைக்கும் அல்கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் புகலிடமாகவும், ஆதரவாகவும் இருந்துவருவதாக குற்றஞ்சாட்டியது. மேலும் பயங்கரவாதிகள் நாட்டில் பதுங்கி செயல்பட அவர்களுக்கு அந்நாட்டு அரசு உதவி செய்கிறது என குற்றம்சாட்டியது.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான், பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவிய காரணத்திற்காக என் நாடு அவமானத்தை சந்திக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரை ஆதரித்ததால் அமெரிக்காவிடமிருந்து இதுபோன்ற விமர்சனத்தை நாங்கள் பெற வேண்டியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு இத்தனை அவமானங்களை சந்தித்த நாடு பாகிஸ்தானை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் இரட்டை கோபுர தாக்குதலின் சூத்திரதாரியான பின்லேடனை 2011-இல் பாகிஸ்தான் நகரமான அபோதாபாத்திற்குள் நுழைந்து அவரின் மறைவிடத்தில் அமெரிக்க சிறப்புப் படை தாக்குதல் நடத்தி கொன்றது. பாகிஸ்தானுக்குள் நுழையப் போவதாக முன்கூட்டியே அமெரிக்கா எங்களிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கர்கள் அபோதாபாத்திற்குள் நுழைந்து ஒசாமாவை கொன்றது. அப்போது அவர் தியாகி ஆகிவிட்டார். அமெரிக்கபடை நாட்டிற்குள் நுழைந்தபோது பாகிஸ்தானியர்களாக அன்று நாங்கள் அவமானப்பட்டதை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என இம்ரான் கான் உணர்ச்சி பொங்க கூறினார்.
ஒசாமாவை பற்றி குறிப்பிடும்போது ஷாகித் என்ற வார்த்தையை பயன்படுத்தினார், இஸ்லாத்தில் தியாகிகளுக்கு ஷாகித் என்று கூறுவது வழக்கம், அது இஸ்லாத்தின் தியாகிகளை குறிக்கும் மரியாதைக்குரிய அரபி சொல்லாகும். இம்ரான் கான், ஒசாமாவை தியாகி என்று கூறியதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான கவாஜா ஆசிப், பிரதமர் இம்ரானை கடுமையாக விமர்சித்தார். பின்லேடன் இறுதி பயங்கரவாதி என்றும் அவர் விமர்சித்தார், நாட்டை அழித்த ஒருவருக்கு தியாகி என்று இம்ரான் கூறியதற்கு மிகுந்த கண்டனத்தையும் தெரிவித்தார். இது குறித்து பாகிஸ்தானிய சமூக செயற்பாட்டாளரான மீனா கபீனா ட்விட்டரில், சமீபத்திய பயங்கரவாத நிகழ்வுகளின் காரணமாக உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் பல்வேறு பாகுபாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் ஒசாமா பின்லேடனை இஸ்லாத்தின் தியாகி என்று அழைப்பதன் மூலம் நமது பிரதமர் அதை மேலும் மோசமாக்கியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.