நம் எல்லைகள் பாதுகாப்பாக இல்லை என்று எங்களுக்கு தெரியும்..!! சீனர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 26, 2020, 9:10 PM IST
Highlights

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவ முயற்சித்தது, ஆனால் இந்திய ராணுவம் அதற்கு சரியான பதிலடி கொடுத்தது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவ முயற்சித்தது, ஆனால் இந்திய ராணுவம் அதற்கு சரியான பதிலடி கொடுத்தது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்திய எல்லைகள் எந்த ஊடுருவலும் நடக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில், கட்கரி இவ்வாறு கூறியுள்ளார். எல்லையில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் இந்தியாவின் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு, அமெரிக்காவுடனான நெருங்கிய உறவு போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியா மீது ஆற்றாமையில் இருந்து வந்த சீனா, கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்தியா சீன எல்லைக்குள் அத்துமீறியதாக கூறி  எல்லையில் தன் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில்  கடந்த ஜூன்-15 ஆம் தேதி இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். எல்லையில் சீனர்களுடன் போராடி இத்தனை எண்ணிக்கையில் இந்திய ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம்  தெரிவித்தது. உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் எல்லையில் கூடதலாக படைகளை குவித்து வருவதால், இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற சுழல் இருந்துவருகிறது. இந்நிலையில் மேற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக தொண்டர் மத்தியில் வீடியோ கன்பிரன்ஸ் மூலம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எங்கள் எல்லைகள் பாதுகாப்பாக இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். சீனா எங்கள் எல்லையில் ஒரு வழியில் ஊடுருவ முயன்றது, ஆனால் ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. 

முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் காலத்திலிருந்து, அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதற்கு இந்திய அரசு எப்போதும் முயற்சித்து வருவதாக நிதின் கட்கரி கூறினார். இந்தியா எல்லை விரிவாக்கம் செய்யும் நாடு அல்ல என்று கூறிய கட்கரி, பூட்டான் போன்ற ஒரு சிறிய நாட்டிடம் கூட ஒரு அடி நிலத்தை  இந்தியா ஆக்கிரமிக்க முயற்சிக்கவில்லை. இந்திய அரசுதான் பங்களாதேஷுக்காக போராடியது, ஆனால் நாங்கள் அவர்களின் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. நாம் அந்த நாட்டுக்கு விடுதலையைதான் பெற்றுகொடுத்தோம், அங்கு அரசாங்கம் அமைப்பதை உறுதிசெய்து பின்னர் அமைதியாக திரும்பி வந்தோம் என்று அவர் கூறினார். அண்டை நாடுகளுடனான நம் கொள்கை நேர்மையானது என அவர் தெரிவித்துள்ளார்.

 

click me!