கடலில் விழுந்த ரஷ்ய விமானம் - கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு

First Published Dec 28, 2016, 9:58 AM IST
Highlights


ரஷ்யாவில் இருந்து சிரியா சென்ற ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கடலுக்கு அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் விபத்துக்குள்ளான காரணம் விரைவில் தெரிய வரும் என அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் சோச்சி பகுதியில் இருந்து ராணுவ விமானம் டியூ-154   சிரியாவின் லடாக்கியாவிற்கு புறப்பட்டு சென்றது. அதிகாலை புறப்பட்டுச் சென்ற இந்த விமானத்தில் 84 பயணிகள் மற்றும் 8  ஊழியர்கள் இருந்தனர். இதில் 9 பத்திரிக்கையாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ரெட் ஆர்மி கொயர் என்ற ரஷ்ய ராணுவத்தின் பிரபல  ராணுவ இசைக்குழுவினர் 60 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்தனர். இவர்கள் சிரியாவில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வீரர்களை  மகிழ்விப்பதற்காக குழுவாக சென்றனர்.

விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானம் என்ன ஆனது என்பது  குறித்து தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்நிலையில் கருங்கடல் பகுதியில்  விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தின. இதனால் விமானத்தில்  பயணம் செய்த 92 பேரும் இறந்திருப்பார்கள் என்றும் அவை தெரிவித்தன. அதை தொடர்ந்து விபத்தில் பலியானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 109 பேர் ஆழ்கடலில் மூழ்கும் நீச்சல் வீரர் ஆவர்.

மேலும் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவர்கள் விபத்தில் பலியானவர்களில் 13 பேரின் உடல்களை மீட்டுள்ளன. இதற்கிடையே விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரஷியாவில் நேற்று தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்த விபத்துக்கு தீவிரவாதிகளின் சதித்திட்டம் காரணமல்ல என ரஷ்யா ஏற்கெனவே அறிவித்துள்ளது. விமானியின் தவறு, தொழில்நுட்பக் கோளாறு, எரிபொருளில் கோளாறு, என்ஜினில் ஏதேனும் அன்னிய பொருள் சிக்கியது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுதான் விமானம் விபத்துக்கு உள்ளானதற்கு காரணம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு அல்லது விமானியின் கவனக் குறைவால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என தெரிகிறது. விமானத்தின் கருப்புப் பெட்டி தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்கான காரணம் விரைவில் தெரிய வரும்.

click me!