Russia Ukraine Crisis :உக்ரைன் மீது ரஷ்யா போர்தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், அங்கு சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள், தங்களை விரைந்து மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Russia Ukraine Crisis :விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி - சக்கராபுரம் பகுதியில் வசிக்கும் சேகர் - விஜயலட்சுமி தம்பதியினரின் மகன் முத்தமிழன். உக்ரைனில் உள்ள வினிட்ஸாவில் இறுதியாண்டு மருத்துவம் படிக்கிறார். இந்நிலையில் அவர் அங்குள்ள நிலவரத்தை பேசி வீடியோ அனுப்பியுள்ளார்.அதில் எங்களால் எளிதில் தூதகரத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் வசிக்கும் இடத்தில் அருகிலே குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கிறது என்று அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
தங்கள் இருப்பிடங்களிலே பாதுகாப்பாக இருக்க உக்ரைன் அரசு அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், மத்திய மற்றும் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களை மீட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், இன்று காலை 6.30 மணிக்கு நாங்கள் வசிக்கும் பகுதிக்கு 60 கிலோமீட்டர் தூரத்தில் குண்டு வெடித்தது. நில அதிர்வும் ஏற்பட்டது என்று கூறியது பீதியை கிளப்பியுள்ளது.
இத்தகவல் அறிந்த உக்ரைன் மக்கள் கடைவீதிகளில் பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். ஏடிஎம்மில் கூட்டம் குவிந்தது. தங்கி இருக்கும் இடத்தைவிட்டு யாரும் வரவேண்டாமென்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.தமிழக மாணவர்கள் சுமார் 150 பேர் உட்பட இந்திய மாணவர்கள் 800 பேர் எங்கள் கல்லூரியில் படிக்கின்றனர். தற்போது 5 அல்லது 6 நாட்களுக்கு மட்டும் எங்களுக்கான உணவுப்பொருள் கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் விமானப்படைத் தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அண்மைத் தகவலில் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு உலக நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துவரும் சூழலில், ''உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து பிரத்யேக ஆயுதங்கள் மூலம் திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறோம். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கவில்லை'' என்று ரஷ்யா தெரிவித்தது.
உக்ரைனில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மாற்று வழிகள் மூலம் இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை வெளியேற்ற மாற்று நடவடிக்கை செய்யப்பட்டவுடன் உடனடியாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் இந்தியர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை எப்போது வைத்திருக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரையும் மீட்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.மேலும் உக்ரைனிலிந்து இந்தியா திரும்ப விரும்பும் தமிழக மாணவர்களின் உதவிக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.