உக்ரைன் மீதான ரஷ்யா போரை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தியா தலையிட வேண்டும் எனவும் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யா போரை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தியா தலையிட வேண்டும் எனவும் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புடினுடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என்று இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போதைய நிலை குறித்து உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேசி அறிந்துகொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா கொத்துக் குண்டுகளை வீசி தாக்கும் நிலையில் இந்தியாவுக்கு உக்ரைன் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், உக்ரைன் - ரஷ்யா இடையேயான தற்போதைய சூழல் மிகப்பெரிய சிக்கலுக்கு வித்திடும் என்று ஐநா சபையில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையேயான சூழ்நிலை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி கருத்து கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் என்றும் அமைதியான தீர்வு வரும் என நம்புகிறோம் எனவும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.
முன்னதாக, உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்கள் தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், உக்ரைன் மக்கள் மீதும், குடியிருப்புகளிலும் தாக்குதல் நடத்தவில்லை என்றும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது. அதிக அளவில் தற்காப்பு, அதிக பாதுகாப்பு கொண்ட ஆயுதங்களால் மட்டுமே உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது. மேலும், உக்ரைன் மீது நடத்தப்படுவது போர் அல்ல என்றும், ராணுவ நடவடிக்கை எனவும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது. மேலும், உக்ரைனில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கும் எண்ணமில்லை என்றும் அதிபர் புடின் கூறியுள்ளார்.