Russia Ukraine Crisis: குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்... உக்ரைனில் 7 பேர் உயிரிழப்பு; 9 பேர் காயம்!!

By Narendran SFirst Published Feb 24, 2022, 4:28 PM IST
Highlights

குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 7 மக்கள் பலியாகியுள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. 

குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 7 மக்கள் பலியாகியுள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. முந்தைய சோவியத் யூனியனில் ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் அடங்கியிருந்தன. சோவியத் உடைந்த பிறகு உக்ரைன் 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24இல் சுதந்திரம் பெற்றது. அதற்குப் பின் தனக்கென தனி சட்டத்திட்டங்களை வகுத்துக் கொண்டது. இருப்பினும் ரஷ்யா தன் சார்பு ஆளை அங்கே அதிபராக நியமித்து பொம்மை அரசாங்கம் நடத்தி வந்தது. ஆனால் இதனை அங்குள்ள மக்கள் ஏற்கவில்லை. அவர்களுக்கு ஐரோப்பிய கலாச்சாரம் மீது மோகம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கலாச்சார எச்சங்களையும் அதன் சட்டத்திட்டங்களையும் உக்ரைன் மக்கள் பின்தொடர விரும்பவில்லை. இதையடுத்து ரஷ்யா ஆதரவு அதிபரை தூக்கியெறிந்தனர்.

தற்போது ஐரோப்பா பக்கம் முழுமையாக சாயும் நிலைக்கு உக்ரைன் வந்துவிட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேட்டோ அமைப்புடன் இணையவும் விருப்பம் காட்டியது. இது தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் நேட்டோவில் சேர கூடாது என ரஷ்யா வலியுறுத்தியது. ஆனால் உக்ரைன் கேட்கவில்லை. உடனே அதனை அடிபணிய வைக்க ரஷ்யா போரை தொடங்கியுள்ளது. காலையில் உக்ரைனின் ராணுவ மையங்களில் வான்வழி தாக்குதல் நிகழ்த்தியது. இதில் ஏராளமான ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

அதேபோல தலைநகர் கீவ்விலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். வான்வழி மட்டுமில்லாமல் தரைவழி தாக்குதலும் ஆரம்பமாகியுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் வேறு நகருக்குச் செல்ல திட்டமிட்டு வருகிறார்கள். ஏடிஎம்களில் பணம் எடுத்து தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருக்கின்றனர். அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது. விலையும் விண்ணைப் பிளக்கிறது. இன்னும் சில மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி மெட்ரோ ரயில் நிலையங்கள், சுரங்கபாதைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 7 மக்கள் பலியாகியுள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு வருத்தத்துடன் அறிவித்துள்ளது. 

click me!