உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் மூளூம் அபாயங்களால் அந்நாட்டு மக்களும் அதன் எல்லையை ஒட்டிய நாடுகளும் பதற்றத்தில் உள்ளனர். உலக அளவில் இந்தப்போர் குறித்த கவலைகளில் மக்கள் உள்ளனர்.
1990களில் சோவியத் யூனியன் பிரிந்தபோது இருந்த பதற்றங்களுக்குப் பிறகு, அதே வீரியத்தில், இன்னும் சரியாக சொல்லப்போனால், அதைவிட அதிக வீரியத்திலான கிழக்கு-மேற்கு பதற்றம் தற்போது நிலவி வருகிறது. பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருக்கிறது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து தனது ராணுவத்தைக் குவித்து வரும் நிலையில், இது தொடர்பாக சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. ரஷியா - உக்ரைன் இடையே நீடிக்கும் பதற்றம் போராக மூண்டால் பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா கவலை வெளியிட்டுள்ளது.
ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா இன்று ஏவுகணை சோதனைகள் நடத்தி அதிரவைத்துள்ளது. மேலும் உக்ரைன் எல்லையில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்துள்ள ரஷியா, எந்த நேரத்திலும் அந்த நாட்டுக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகக் குழுக்கள் மீது தாக்குதல் நடந்ததாக உக்ரைன் அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய பிரிவினைவாதிகள் ஷெல் தாக்குதலில் 2 உக்ரேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
அதோடு கிழக்கு உக்ரேனில் ரஷ்யாவின் எல்லைக்கு அருகே உள்ள லுஹன்ஸ்க் நகரில் 18-55 வயதுடைய ஆண்கள் நகரை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டு போருக்கு அணிதிரளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருவது ரஷியா - உக்ரைன் இடையே போர் பதற்றத்தை தீவிரம் அடைய செய்திருக்கிறது. அதிபர் ஜோ பைடன், ‘அமெரிக்கா மற்றும் நமது நட்பு நாடுகள் அனைத்தும் நேட்டோ-வின் நாடுகளை ஒவ்வோர் அங்குலமாக அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கத் தயாராக உள்ளன. நாங்கள் உக்ரைனில் சண்டையிட, படைகளை அனுப்ப மாட்டோம். ஆனால் உக்ரேனிய மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்’ என்று கூறியதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.