ரஷ்யா - உக்ரைன் இடையே போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில், இன்று உக்ரைன் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில், இன்று உக்ரைன் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கும், அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவெ மோதல் இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை கைபற்றியதில் தொடங்கிய இந்த மோதல் தற்போது போர் மூளும் அபாயத்தை எட்டியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1.30 லட்சத்திற்கும் மேற்பட்ட படை வீரர்களை ரஷ்யா குவித்திருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் எனவும் அதற்காகவே எல்லையில் படைகளை குவித்து வருவதாகவும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வந்த நிலையில், அந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து வந்தது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ரஷ்யா, எல்லையில் வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்திருக்கிறது. அதேபோல் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, போர் விமானங்கள், கப்பல்கள், படைகளை அனுப்பி உதவி வருகின்றன.
இரு நாட்டிலும் படைகள் தயாராக உள்ளதால் 3 ஆம் உலகப்போர் மூளும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது. அங்கு நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்தியா உள்பட 12க்கும் மேற்பட்ட நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை உக்ரைனில் இருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளன. ஒரு படி மேலாக ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் தங்களது தூதரக அதிகாரிகளையும் உக்ரைனில் இருந்து வெளியேற்றியிருக்கின்றன. அதேநேரம் உக்ரைனில் இருந்து 25 கி.மீ முதல் 45 கி.மீ தூரம் வரை ரஷ்யா ராணுவத்தை குவித்து வைத்திருப்பது, மாக்சர் வெளியிட்டுள்ள செயற்கைகோள் படங்களில் தெரியவந்தது. எந்த நேரத்திலும் ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தலாம் என அஞ்சப்படும் சூழலில், உக்ரைன் எல்லையான கிரிமியாவில் நடைபெற்று வந்த போர் பயிற்சி நிறைவு பெறுவதாகவும், படைகள் முகாம்களுக்கு திரும்பியதாகவும் ரஷ்யா அறிவித்தது.
ஆனால் இதனை அமெரிக்காவும், நேட்டாவும் மறுத்தது. ரஷ்யா கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை என திட்டவட்டமாக கூறியது. ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில், பதற்ரத்தை தனிக்க பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வந்தன. இந்நிலையில் இன்று உக்ரைன் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது. உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதியான டான்பஸ் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், 29 முறை அடுத்தடுத்து தாக்குதல் நடைபெற்றதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 2 ஆசிரியர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் உக்ரைமில் மீண்டும் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.