மழை வெள்ளத்தின் நடுவே, தண்ணீரில் மிதக்கும் சர்ச்சில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டதற்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
மழை வெள்ளத்தின் நடுவே, தண்ணீரில் மிதக்கும் சர்ச்சில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி;
காதல் என்று வந்துவிட்டால் தமிழில் ஒரு அழகான பாடல் வரி உண்டு ”கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு” மாமலையும் ஓர் கடுகாம்.
இந்த வரிகளுக்கு பொருந்தும்படியான ஒரு சம்பவம் பிலிப்பைன்ஸில் அரங்கேறி இருக்கிறது. தற்போது அங்கு நிலவும் பருவநிலை மாற்றம் காரணமாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டி தீர்த்திருக்கிறது
பிலிப்பைன்ஸின் வடபகுதியில் தலைநகரான மணிலாவில் இதன் காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கும் தருணத்தில் ஒரு காதல் ஜோடி தங்கள் திருமணத்தை நிகழ்த்தி இருக்கின்றனர்.
இவர்கள் புலாகன் புராவின்ஸ் எனும் பகுதியில் உள்ள சர்ச்சில் வைத்து திருமணம் செய்வதற்கு முன்னதாகவே திட்டமிட்டிருந்திருக்கின்றனர். ஆனால் திடீரென ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக அவர்கள் திட்டமிட்டபடி திருமண நிகழ்வை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அவர்கள் திருமணம் செய்துகொள்ள இருந்த சர்ச்சின் உள்ளேயும் வெள்ளம் புகுந்துவிட்டது.
இத்தனை தடைகள் வந்த போதும் கூட தாங்கள் எடுத்த முடிவில் கொஞ்சமும் மனம் தளராமல் , நினைத்தபடியே திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர் இந்த ஜோடி. படகில் சர்ச் வரை வந்த பிறகு, முட்டளவு வெள்ள நீரின் நடுவே மகிழ்வுடன் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் அவர்களின் நண்பர்களும் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்திருக்கின்றனர்.
வெள்ளத்தில் நனைந்தபடி நடைபெற்ற இவர்களின் இந்த திருமண வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகி தற்போது வைரல் ஆகி இருக்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் மணமக்களுக்கு தங்கள் ஆசியையும், வாழ்த்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.