ஹாலிவுட் திரைப்படத்தில் நடப்பது போல சிறையில் குண்டு வீசி விட்டு ஹெலிகாப்டரில் கொள்ளையன் தப்பித்து சென்றான். பிரான்சை சேர்ந்த பிரபல கொள்ளையன் ரெடொயின் பெய்ட் ஹாலிவுட் திரைப்படத்தில் இருப்பவர் போல உருவம் படைத்தவர். இவர் பிரான்சின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். 2010-ல் நடந்த வங்கி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவர் செய்த குற்றத்திற்காக 25 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இதனையடுத்து பாரிஸின் தென்கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் நேற்று காலை பெய்டை சந்திப்பதற்காக அவரது சகோதரர் சிறைக்கு வந்திருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக சிறையின் வாயில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதைக் கண்டதும் ஆயுதமில்லாத காவலர்கள் அலறியடித்து ஓடி அலாரத்தை அழுத்தினர்.
திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக புழுதிபறக்க வட்டமடித்தது ஹெலிகாப்டர் ஒன்று. அதில் இருந்து தொங்கிய கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஹீரோ போல பறந்து சென்றார். அலாரம் கேட்டு காவலர்கள் அனைவரும் அப்பகுதிக்குள் விரைவதற்குள் பெய்ட் மாயமாகிவிட்டார். பிறகு அந்த ஹெலிகாப்டரை பாரிஸின் புறநகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுகுறித்து விசாரித்த போது துப்பாக்கி முனையில் ஹெலிகாப்டர் கடத்தி வரப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 2013-ம் ஆண்டு , துப்பாக்கி முனையில் 4 சிறைகாவலர்களை பிணைக் கைதிகளாக பிடித்துக்கொண்டு, வெளியே தயாராக நின்ற காரில் தப்பியிருக்கிறார். அடுத்த 6 வாரத்துக்குப் பிறகு புறநகர் பகுதியில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.