நைஜீரியாவில், முன்னாள் அதிபர் அபசா சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்த கறுப்பு பணத்தை மீட்டு அதை, நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த , 1993 ஆம் ஆண்டு முதல் 1998 வரை அதிபராக இருந்தவர் அபசா. இவர் திடீர் மாரடைப்பால் 1998ல் உயிரிழந்தார். தன் பதவிக் காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணத்தை பதுக்கிய அபசா, அதை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்தார்.
கடந்த 2015 ஆண்டு நைஜீரியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது தற்போதைய அதிபர் புஹாரி, சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ள பணத்தை மீட்டு மக்களுக்குத் தருவேன் என வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், நைஜீரிய அதிபர் முகம்மது புஹாரி, கறுப்பு பணத்தை மீட்டு நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, சுவிஸ் வங்கி அதிகாரிகளுடன் நைஜீரிய அரசு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. உலக வங்கி மேற்பார்வையில், முதற்கட்டமாக, 2,000 கோடி ரூபாய் நைஜீரிய அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதை, அந்நாட்டில் வசிக்கும் மூன்று லட்சம் குடும்பங்களுக்கு சமமாக பிரித்தளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.