பிரதமர் மோடி இன்று மதியம் நடைபெற உள்ள, பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் கலந்து கொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரச முறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். நேற்று மாலை பாரிஸ் சென்றடைந்த பிரதமருக்கு விமான நிலையத்தில் சம்பிரதாயமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே விமான நிலையத்தில் வரவேற்றார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வியாழக்கிழமை (உள்ளூர் நேரம்) பாரிஸில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லமான எலிசி அரண்மனையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரான்ஸ் முதல் பெண்மணி பிரிஜிட் மேக்ரான் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர் (Grand Cross of the Legion of Honour) விருதை வழங்கினார். பிரான்ஸில் ராணுவம் அல்லது பொதுமக்களுக்கு சேவையாற்றுவோருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும். இதன் மூலம், இந்த பெருமையை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து , La Seine Musicale என்ற கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பிரான்சில், இந்தியாவின் UPI ஐப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது, பிரான்ஸ் அரசின் உதவியுடன் மார்சேயில் புதிய தூதரகத்தை திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது, பிரான்ஸில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பிரதமர் மோடி இன்று, பிற்பகல் 1:30 மணியளவில், பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் கலந்து கொள்கிறார். பாஸ்டில் தின அணிவகுப்பை காணும் பிரதமர், ஜனாதிபதி மக்ரோனுடன் இந்தியக் குழுவையும் சந்திக்க உள்ளார். மாலை 4:30 மணியளவில், தேசிய சட்டமன்றத்தின் தலைவர் திருமதி பிரவுன்-பிவெட் வழங்கும் மதிய உணவில் பிரதமர் கலந்து கொள்வார். அதன்பின், மாலை 6:15 மணியளவில், பிரதமர் பல்வேறு சிந்தனைத் தலைவர்களை சந்திப்பார்.
சுமார் 8:30 மணியளவில், எலிசி அரண்மனையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்வார், அதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அதுதொடர்பான செய்தி அறிக்கைகளும் வெளியிடப்படும். பின்னர் சுமார் 10:30 மணியளவில் பிரதமர் இந்தியா-பிரான்ஸ் CEO மன்றத்தில் பங்கேற்க உள்ளார். அதன்பிறகு, பிரதமர் லூவ்ரே அருங்காட்சியகத்திற்குச் செல்லும் பிரதமர், அங்கு அவர் விருந்திலும் கலந்துகொள்ள உள்ளார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், அதிபர் மேக்ரானும் ஈபிள் டவரில் பட்டாசு வெடிப்பதை ஒன்றாக சேர்ந்து பார்க்க உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி! இதுவரை அவர் பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன?