“இதுதான் மிகப்பெரிய பெருமை” தமிழை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி.. பிரான்ஸில் விரைவில் திருவள்ளுவர் சிலை

By Ramya s  |  First Published Jul 14, 2023, 9:35 AM IST

பிரான்ஸில் விரைவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.


அரசமுறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள மோடி, பாரிஸில் பிரபுலம்பெயர்ந்த இந்தியர்களிடையே நேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரான்ஸில் யுபிஐ முறையில் இந்திய சுற்றுலா பயணிகள் இந்திய ரூபாயில் பணம் செலுத்தும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், தமிழின் பாரம்பரியம் மற்றும் பெருமை குறித்தும் பிரதமர் மோடி பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழி இந்திய மொழி என்பதை விட பெரிய பெருமை வேறு என்ன இருக்க முடியும்,'' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பிரான்ஸில் விரைவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்து பேசிய போது " இன்னும் சில மாதங்களில், பிரான்ஸின் செர்ஜி மாகாணத்தில் திருவள்ளுவரின் சிலை அமைக்கப்படும். இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.

Latest Videos

undefined

தொடர்ந்து பேசிய பிரதமர், தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம்தான் சிலை அமைக்கும் யோசனையை முன்னெடுத்தது என்று தெரிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பார்வையாளர்களிடமிருந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பேசிய பிரதமர், திருவள்ளுவர் சிலை, தமிழ் இலக்கியம் மற்றும் தத்துவத்தின் வளமையான பாரம்பரியத்தை சர்வதேச அரங்கில் கொண்டாடும் கலாச்சார மற்றும் வரலாற்று மரபுகளின் அடையாளமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஒரு தாய் தன் குழந்தை பாராட்டப்படும்போது எப்படி மகிழ்ச்சியாக இருப்பாள் என்பதற்கு திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். ”ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை- சான்றோன் என கேட்ட தாய்”  என்ற திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ளனர்.இந்திய புலம்பெயர்ந்த மக்களை "இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடர்" என்று விவரித்தார்.

மேலும் பேசிய பிரதமர் “ இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற அதிக காலம் எடுக்காது என்று உலகம் நம்பியுள்ளது. இந்தியா ஜனநாயகத்தின் தாய் மற்றும் பன்முகத்தன்மையின் மாதிரி; அது எங்கள் பெரிய பலம்.  இந்திய-பிரெஞ்சு உறவை மேம்படுத்துவதில் உங்கள் (பிரான்சில் உள்ள புலம்பெயர்ந்த இந்திய உறுப்பினர்கள்) பங்களிப்பு வரலாற்றில் பொன்னான வார்த்தைகளில் எழுதப்படும். இந்தியர்களாகிய நாம் எங்கு சென்றாலும் அங்கே 'மினி இந்தியா' உருவாக்குகிறோம்.

பிரான்ஸ் அரசின் உதவியுடன் மார்சேயில் புதிய தூதரகத்தை திறக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரான்சில் முதுகலை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 5 வருட நீண்ட கால படிப்புக்கு பிந்தைய விசா வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று ஒவ்வொரு ரேட்டிங் ஏஜென்சியும் இந்தியா ஒரு பிரகாசமான இடம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இப்போது இந்தியாவில் முதலீடு செய்யுங்கள். இதுவே தக்க தருணம். முன்கூட்டியே முதலீடு செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி! இதுவரை அவர் பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன?

click me!