
குற்றவாளிகள் என சந்தேகப்பட்டவர்களை சுட்டுக் கொன்ற பிலிப்பைன்ஸ் அதிபர்….சட்டத்தை கையில் எடுத்ததால் பரபரப்பு…
ரொட்ரிகோ டுடெர்டே…..கடந்த ஜூன் மாதம் பிலிப்பைன்ஸ் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது போதை மருந்துகளை முற்றிலும் ஒழிப்பேன் என்றும்,போதைப் பொருட்களை கடத்தும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்றும் உறுதி அளித்தார். அதன்படி அவர் எடுத்துவரும் நடவடிக்கையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தலைநகர் மனிலாவில் நடைபெற்ற தொழில் அதிபர்கள் கூட்டமொன்றில் பேசிய அதிபர் டுடெர்டே, டாவோ நகரில் தான் மேயராக இருந்தபோது, குற்றவாளிகள் என சந்தேகப்பட்டவர்களை தானே சுட்டுக் கொன்றதாக தெரிவித்தார்.
அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே வின் இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. ஆனால் அது குறித்து விளக்கமளித்த டுடெர்டே, போதை பொருள் விற்பவர்களுக்கு எதிராக போலீசாரும் அவ்வாறு நடவடிக்கை எடுக்க இயலும் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதற்காகவே தான் அவ்வாறு செய்ததாக குறிப்பிட்டார்.
பிலிப்பைன்ஸில் உள்ள கொலைப் படைகளில் தான் பங்கு வகித்தது குறித்த.ஏற்கனவே டுடெர்டே ஒப்புக்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அவரது இந்த வாக்குமூலம் அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.