புர்கா அணிய தடை: இலங்கை அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை

By Asianet TamilFirst Published Feb 22, 2020, 4:08 PM IST
Highlights

இலங்கையில் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பெண்கள் யாரும் புர்கா அணியவும், இனரீதியாகவும், மதரீதியாகவும் அரசியல்கட்சிகளைப் பதிவு செய்யத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி இலங்கை அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
 

கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க எம்.பி. மலித் ஜெயதிலகா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

உலகில் ஏராளமான நாடுகள் புர்காவை தடை செய்துள்ளன. ஆதலால், உள்நாட்டு பாதுகாப்பு கருதி பெண்கள் புர்கா அணிவதை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

முகத்தை மறைத்து யார் பொதுவெளியில் சென்றாலும், அவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்கள் முகத்தில் உள்ள துணியை அகற்றி அடையாளத்தைக் காண போலீஸாருக்கு முழுமையான அதிகாரம் அளிக்க வேண்டும்.
அந்த வேண்டுகோளுக்கு உடன்படாவிட்டால், போஸீஸார் வாரண்ட் இன்றி யாரையும் கைது செய்யும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

இன ரீதியாக, மத ரீதியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளைத் தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டு ரத்து செய்ய வேண்டும். அதேபோல, இன, மதரீதியாக அரசியல் கட்சிகள் பதிவு செய்யவும் தடை விதிக்க வேண்டும்.
அவ்வாறு ஏற்கனவே அரசியல் கட்சிகள் இருந்தால், அந்த கட்சிகளை மதச்சார்பற்ற கட்சியாகக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மாற்ற வேண்டும்.

முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு உட்பட்ட மதரஸாக்களில் படித்து வரும் மாணவர்கள் அனைவரையும் 3 ஆண்டுகளுக்குள் மத்திய கல்வித்துறையின் வழக்கமான பள்ளிக்கு மாற்ற வேண்டும். மத்திய கலாச்சார மற்றும் முஸ்லிம் மத துறையின் கீழ் மதரஸாக்களை முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!