
பலுசிஸ்தான் மாகாணத்தின் மீது, குறிப்பாக இரவு நேரத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டை இழந்து வருவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் காக்கான் அப்பாஸி தெரிவித்துள்ளார். மூத்த அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் பாதுகாப்புப் படையினர் இல்லாமல் பலுசிஸ்தானில் சுற்றித் திரிய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக பலுசிஸ்தான் போராளிகள்
பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தில் இஸ்லாமாபாத்துக்கு எதிராக கலவரம் வெடித்து வருகிறது. இன்றல்ல, நேற்றல்ல இது. பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வருகிறது. தனி நாடு கோரி தொடர்ந்து பலுசிஸ்தான் போராளிகள் போராடி வருகின்றனர். தற்போது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் அதிகரித்து இருக்கும் நிலையில், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பலுசிஸ்தான் போராளிகள் முயற்சித்து வருகின்றனர். 1948 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக தங்களது பகுதி பாகிஸ்தானில் இணைக்கப்பட்டதாகக் கூறி மீட்பதற்கும், தனி நாடு கோரியும் போராடி வருகின்றனர். இந்த மாகாணத்தில் நிலக்கரி, தாமிரம், தங்கம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. இருப்பினும், இந்த வளங்களால் உள்ளூர் மக்களுக்கு எந்த பலனும் இல்லை.
கடந்த இரண்டு நாட்களுக்கும் முன்பு பலுசிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது பலுசிஸ்தான் போராளிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். இதன் மூலம் பாகிஸ்தான் உள்நாட்டு நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகி இருந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தில், கலாட் மாவட்டத்தில் உள்ள மங்கோச்சர் நகரில் இருக்கும் முக்கிய அரசு கட்டிடங்கள் மற்றும் ராணுவ நிறுவனங்களை பலுச் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
பாகிஸ்தானில் இருக்கும் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களால் பாகிஸ்தான் தத்தளித்து வரும் நிலையில், உள்நாட்டு சிக்கலையும் சமாளிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தின் பிடியில் இருந்து பலுசிஸ்தான் வெளியேறுகிறது என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி, ''பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலிருந்து பெருமளவில் பலுசிஸ்தான் நழுவி விட்டது. அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உள்ள பயம் என்னவென்றால், பாதுகாப்புப் படையினர் இல்லாமல் அவர்கள் இருட்டிய பிறகு வெளியே செல்ல முடியாது என்பதுதான். பலுசிஸ்தானில் ஒரு சில கிளர்ச்சியாளர்கள் மட்டுமே இருப்பதாக ராணுவ தளபதி அசிம் முனீர் தவறாக கருதிக் கொண்டு இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
2017 முதல் 2018 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த அப்பாஸி, சமீபத்தில் அளித்த பேட்டியில், "பலுசிஸ்தானில் அமைதியின்மைக்கு 1,500 பேர் காரணம்" என்ற பாகிஸ்தான் ராணுவத்தின் அசிம் முனிர் கூறி இருக்கிறார். அசிம் முனிர் என்ன சொன்னாலும் அது அவருடைய கருத்து, நான் பார்த்ததை மட்டுமே கூறுகிறேன்" என்று அப்பாஸி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி பேட்டி மே 5 அன்று வெளியானது. இந்த நிலையில் பலுசிஸ்தானின் போலன் மற்றும் கெச்சில் பலுச் விடுதலை ராணுவத்தினர் (BLA) மே 6 அன்று நடத்திய இரண்டு தனித்தனி தாக்குதல்களில் 14 பாகிஸ்தான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை கேள்விக்குள்ளாக்கிய அப்பாஸி, பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தான் முழுவதும் நிச்சயமற்ற சூழல் நிலவுவதாகக் தெரிவித்துள்ளார்.
ஆயுதமேந்திய பலூச் கிளர்ச்சியாளர்கள் இப்போது மாகாணத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் வெளிப்படையாக ரோந்து செல்கின்றனர். மிகப்பெரிய நெடுஞ்சாலையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அவர்களது விருப்பப்படி சோதனைச் சாவடிகளை அமைக்கின்றனர். மேலும் நகர்ப்புறங்களை மணிக்கணக்கில் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பலுசிஸ்தானில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் உறுதியளித்துள்ளார். "பத்து தலைமுறை பயங்கரவாதிகளால் கூட பலுசிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் தீங்கு விளைவிக்க முடியாது" என்று அவர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
கடந்த மார்ச் மாதத்தில், 380 பயணிகளுடன் வந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை BLA கடத்தியது,. அப்போது நடந்த தாக்குதலில் பொதுமக்கள், பாகிஸ்தான் ராணுவத்தினர் என்று மொத்தம் 21 பேர் பலியானதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் ஆபரேஷன் கிரீன் போலனைத் தொடங்கியது. இதில் 64 பேர், பெரும்பாலும் பலூச் கிளர்ச்சியாளர்கள், ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டதாக இஸ்லாமாபாத் தெரிவித்து இருந்தது.
இருபக்கமும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி:
Balochistan Liberation Front (BLF) and Baloch Republican Army (BRA)இரண்டு போராளி குழுக்கள் தற்போது நேரடியாக பாகிஸ்தான் ராணுவத்தினருடன் போரிட்டு வருகின்றனர். ஒரு பக்கம் இந்தியாவில் இருந்து வரும் அழுத்தம், மறுபக்கம் பலுசிஸ்தானில் இருந்து வரும் அழுத்தம் என்று பாகிஸ்தான் தலைமை தவித்து வருகிறது. மறுபக்கம் ஆப்கானிஸ்தானில் இருந்தும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.