
14 Pakistani soldiers killed attack by BLA: பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் போலான் மற்றும் கெச் பகுதியில் பலுச் விடுதலை இராணுவம் (BLA)நடத்திய தாக்குதலில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் முதல் தாக்குதலில், பலுச் விடுதலை இராணுவத்தின் சிறப்பு தந்திரோபாய நடவடிக்கைப் படை (STOS), போலனின் மாக், ஷோர்கண்ட் பகுதியில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வாகனத் தொடரணி மீது ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் சாதனம் (IED) தாக்குதலை நடத்தியது.
சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் சிறப்பு நடவடிக்கை தளபதி தாரிக் இம்ரான் மற்றும் சுபேதார் உமர் பாரூக் உட்பட வாகனத்தில் பயணித்த 12 வீரர்களும் கொல்லப்பட்டனர். குண்டுவெடிப்பில் இராணுவ வாகனம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இரண்டாவது சம்பவத்தில், கெச்சின் குலாக் டைக்ரான் பகுதியில் பலூச் செயற்பாட்டாளர்கள் பாகிஸ்தான் இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழக்கும் படையை குறிவைத்தனர். அதாவது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் வெடிக்கும் கருவியை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 2 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த 2 தாக்குதலிலும் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் உள்ள அப்பாவி மக்களை கொல்லும் பயங்கரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு பலுச் விடுதலை இராணுவம் எனப்படும் பயங்கரவாத இயக்கமே பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. பலுச் விடுதலை இராணுவ இயக்கத்தினர் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது நீண்டலாகமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். பலுசிஸ்தானில் ஏராளமான கனிம வளங்கள் இருந்தாலும், அதன் பலன்கள் முதன்மையாக பாகிஸ்தான் அரசாங்கத்தாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களாலும் அறுவடை செய்யப்படுகின்றன. இதனால் உள்ளூர் சமூகங்கள் வறுமையில் வாடுகின்றன என்று பலுச் விடுதலை இராணுவ இயக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
பாகிஸ்தான் அரசு உள்ளுர் மக்களை தொடந்து கைவிட்டு வருவதாக கூறி அரசுக்கு எதிராக பலுச் விடுதலை இராணுவத்தினர் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்கள் மனித உரிமை மீறல்கள் மற்றும் பாகிஸ்தான் ஆட்சி மற்றும் இராணுவத்தால் பிராந்தியத்தின் இயற்கை வளங்களை சுரண்டுதல் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து ராணுவத்தை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பலுச் விடுதலை இராணுவ குழுக்கள் மட்டுமில்லாது அங்குள்ள பல போராளி குழுக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் இராணுவத்தை ஒரு பாதுகாப்புப் படையாக அல்லாமல் ஒரு ஆக்கிரமிப்பாளராக அவர்கள் கருதுகின்றனர். இந்த ஆண்டு மார்ச் 11 அன்று, பலுசிஸ்தானின் போலான் பகுதியில் 400க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் கடத்தி பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தது. பாகிஸ்தான் ராணுவத்தினர் அவர்களிடம் இருந்து பயணிகளை மீட்டது குறிப்பிடத்தக்கது.