வறுமையின் விளிம்பில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்; ஆனால் ஒரு பக்கம் இயற்கை வளங்கள் கொள்ளை!!

By Dhanalakshmi GFirst Published Feb 17, 2023, 12:09 PM IST
Highlights

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பலுசிஸ்தான் மக்களின் அவலநிலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த செய்தியை எழுதி இருப்பவர் மனித உரிமை ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பலுசிஸ்தான் ஆகிய இரண்டு பகுதிகளும் கோதுமை மற்றும் மின்சாரம் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிறு வர்த்தகம் மற்றும் பட்டறைகள் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பட்டினியில் வாடுகின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் உள்ளனர். ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கும் மேலாக பொருளாதார சீரழிவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

தற்போது நிலவி வரும் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை மக்கள் துணிச்சலாக தாங்கி, தினசரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிதிப்பற்றாக்குறை காரணமாக இரண்டு பகுதிகளிலும் ஓய்வூதியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

பிப்ரவரி 5 ஆம் தேதியை காஷ்மீர் ஒற்றுமை தினமாக கடைப்பிடிப்பதன் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவைப் பெறும் முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. அன்று, பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதில் கலந்து கொண்டு பேசியவர்கள், யூனியன் பிரதேசத்தில் காஷ்மீரிகளை இந்தியா தவறாக நடத்துகிறது என்ற பாகிஸ்தானின் கூற்றை நிராகரித்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீருக்கும்  இடையே மாவு, வெங்காயம், தக்காளி மற்றும் பிற அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஒப்பிடுவது குறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் பேசப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு வந்திருந்த சர்வதேச நாணய நிதியம் ராணுவம் மற்றும் அதிகார மட்டங்களில் வழங்கப்பட்டு வரும் சலுகைகளை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியது. நடப்பாண்டில் ஜூன் மாதம் தாக்கல் செய்யப்படும், அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முன்பாக எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களை அதிகரிக்கவும், அடுத்த ஐந்து மாதங்களில் 6 பில்லியன் டாலர்கள் திரட்டவும், மொத்தம் 16 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி ஈட்டவும் சர்வதேச நாணய நிதியம் இஸ்லாமாபாத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

இலக்குகளை அடைவதற்கு இஸ்லாமாபாத் இந்த நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியதுடன், கடந்த நவம்பர் மாதம் முதல் பாகிஸ்தானுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் 1.3 பில்லியன் டாலர்  கடனை விடுவிக்கவும் இந்த பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்று நிர்பந்தித்துள்ளது. 

Petrol Price in Pakistan:பாகிஸ்தான் மக்களுக்கு அதிர்ச்சி! பெட்ரோல், டீசல், கேஸ் விலை வரலாற்று உயர்வு

பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு முன்பாக, ராணுவ வணிக நிறுவனமான ஃபாஜி பெர்டிலைசர் கம்பெனி லிமிடெட் 109 பில்லியன் ரூபாய் மதிப்பிலான உரங்களை விற்று 40 பில்லியன் ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளது. இந்த பெர்டிலைசர் கம்பெனியை பாகிஸ்தான் ராணுவம்தான் நிர்வகித்து வருகிறது. அதன் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெறுவதற்கு முன்பு ரூ.12 பில்லியன் நிதி ஆதாரத்தை வழங்கிவிட்டுதான் சென்றுள்ளார். 

பாகிஸ்தா ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பலுசிஸ்தானில் இருந்து மில்லியன் டாலர் மதிப்பிலான லித்தியம் மற்றும் பிற விலைமதிப்பற்ற கனிமங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இவை பாகிஸ்தானுக்கு தினமும்  கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இவை எல்லாம் கணக்கில் காட்ட்ப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

Pakistan economic crisis:பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளதாரம்! பால் லிட்டர் ரூ.210, கோழி இறைச்சி கிலோ ரூ.800!

அம்ஜத் அயூப் மிர்சா எழுதி இருக்கும் இந்த கட்டுரையில், ''25 டன் லித்தியம் கொண்ட ஒரு டிரக் லோடு விலை ரூ.53 கோடி. இவ்வாறு பல லோடுகள் கடத்தப்பட்டுள்ளன'' என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் பலுசிஸ்தான் ஆகியவை ஏழ்மை நிறைந்த பகுதிகள் என்று கூற முடியாது. இருந்தாலும் இப்பகுதியில் மக்களின் மனங்கள் சுரண்டப்பட்டுள்ளன. 

பலுசிஸ்தான், சிந்து மாகாணம், பஸ்தூன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் பலுசிஸ்தான் பகுதி மக்கள் துப்பாக்கி மிரட்டலுக்கு இடையே வாழ்ந்து வருகின்றனர். உண்மையான அரசியல் அல்லது பொருளாதார உரிமைகள் எதுவும் அவர்களால் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் என்பது அல்லாவின் படைப்பு என்றும், கிடைத்த வாய்ப்பில் பாகிஸ்தானை அழிக்க நினைக்கும் 'இந்து' நாடுதான் இந்தியா என்றும் கடந்த 75 வருடங்களாக பாகிஸ்தான் திரித்து வருகிறது. 

பலுசிஸ்தான் மற்றும் பஸ்தூன் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தான் பகுதிகளில் மக்கள் தெருக்களில் நிற்கின்றனர். பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களை பாகிஸ்தான் ராணுவம்  கைவிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கும், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. 

சீன நிறுவனங்கள் வழங்கிய சேவைகள் மற்றும் பொருட்களுக்கு பணம் செலுத்தாததால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் பலுசிஸ்தான் திட்டங்களில் இருந்து சீனா பின்வாங்கியுள்ளது. 

அரசியல் சிக்கலும் அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு நடந்த தேசிய சட்டமன்றத்துக்கான தேர்தலில் அதிக இடங்களை அவாமி லீக் வென்றது. தற்போது இந்த கட்சியை நசுக்குவதற்கு சதித்திட்டம் நடந்து வருகிறது. கிழக்கு பாகிஸ்தானில் புளூ ஸ்டார் என்ற பெயரில் ராணுவம் சோதனையை மேற்கொண்டு அவாமி லீக் கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகிறது. 1971-க்கு முன்பு எவ்வாறு அரசியல் நெருக்கடி பாகிஸ்தானில் இருந்ததோ அதேநிலை தற்போதும் நீடிக்கிறது. முந்தைய போரின் அளவிற்கு அரசியல் நெருக்கடி ஆழமடைந்தது. 13 கட்சிகள் கூட்டணி அமைத்து நாட்டை நடத்தி வருகின்றன. 

இருப்பினும், பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் பலுசிஸ்தான், சிந்து, கைபர் பக்துன்க்வா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் சாத்தியம். 

இந்த செய்திக்கான ஆசிரியர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா. அவர் தற்போது இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்.

இந்தக் கட்டுரை முதலில் AwazTheVoice-ல் வெளியானது. வெளிப்படையான அனுமதியுடன் மீண்டும் செய்தியாக்கப்பட்டுள்ளது.

click me!