
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இஸ்லாமாபாத் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் அப்தாலி ஆயுத ஏவுகணை சோதனை
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் சனிக்கிழமை, மே 03, 2025 அன்று அப்தாலி ஆயுத ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக அறிவித்துள்ளது. அப்தாலி ஆயுத ஏவுகணை 450 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் இலக்கு கொண்டது.
தகவலை வெளியிடாத பாகிஸ்தான் ராணுவம்
இந்த ஏவுகணை சோதனை ராணுவப் படை தயார் நிலையில் இருப்பதையும், தொழில்நுட்ப ரீதியாக சரி செய்து கொள்ளவும், ஏவுகணை மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும் இந்த சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், எது மாதிரியான பயிற்சி என்பது குறித்து எந்த தகவலையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிடவில்லை. ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் ராணுவ ஆலோசனை படையின் கமாண்டர், மூத்த அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ மூத்த தலைவர்கள், விஞ்ஞானிகள் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்தியா கண்டனம்
பாகிஸ்தானின் ஏவுகணை சோதனையை இந்தியா எதிர்பார்த்து வருவதாக உயர் அதிகாரிகள் முன்பு ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருந்தனர். அத்தகைய நடவடிக்கை "பொறுப்பற்ற ஆத்திரமூட்டல் செயல் மற்றும் ஆபத்தானது'' என கருதப்படும் என்று குற்றம்சாட்டி இருந்தன.
உண்மையில் ஏவுகணை சோதனை நடத்தியதா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா தொடர்ச்சியான ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் தொடர்ந்து இப்பகுதியில் ஏவுகணை சோதனைகளை நடத்துவதாக அச்சுறுத்தும் NOTAMகளை (விமானப்படை வீரர்களுக்கான அறிவிப்புகள்) வெளியிட்டு வருகிறது. இருப்பினும், இன்று வரை அது எந்த ஏவுகணைகளையும் சோதிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
அரபிக் கடலில் பாகிஸ்தான் கடற்படை பயிற்சி
இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்கு அஞ்சி, பதட்டமடைந்த பாகிஸ்தான், அரபிக் கடலில் கடற்படைப் பயிற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) மற்றும் சர்வதேச எல்லையில் போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் விமானப்படை ஒரே நேரத்தில் மூன்று பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது, இதில் F-16, J-10 மற்றும் JF-17 உள்ளிட்ட அனைத்து முக்கிய போர் விமானங்களும் அடங்கும். எல்லையில் வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கி பிரிவுகளையும் நிறுத்தியுள்ளது. ராஜஸ்தானின் பார்மரில் உள்ள லோங்கேவாலா துறைக்கு அருகிலும் அதிநவீன ரேடார் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்திய ராணுவத்துக்கு பிரதமர் மோடி அதிகாரம்
இந்திய ராணுவத்துக்கும் அனைத்து அதிகாரங்களையும் பிரதமர் மோடி அளித்திருக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் உள்ளது. இந்தியாவும் ரபேல் விமான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.