
இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் வான்வெளிகளை மூடியதால், பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றன. இந்திய விமான நிறுவனங்கள் அதிக எரிபொருள் செலவுகளை சந்தித்து வருகின்றன. அதே நேரத்தில் பாகிஸ்தான் அதிக விமானக் கட்டணங்களால் வருவாயை இழக்கிறது. எந்த நாடு அதிகமாக இழக்கிறது என்பது குறித்த பகுப்பாய்வை பார்க்கலாம்.
இந்தியா பாகிஸ்தான் வான்வெளி மூடல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்தியாவுக்கு மூடியது. இந்தியா பாகிஸ்தானுக்கான தனது வான்வெளியை மூடியுள்ளது. இது இரண்டு விமான நிறுவனங்களுக்கும் செலவுகளை அதிகரித்துள்ளது. ஏனென்றால், இந்தியாவும், பாகிஸ்தானும் வேறு வழியாகத்தான் அண்டை நாடுகளுக்கு விமானங்களை இயக்க முடியும். இது விமானத்தின் தூரத்தை மட்டுமின்றி செலவையும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், எந்த நாடு அதிக இழப்பைச் சந்திக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
டாடாவின் ஏர் இந்தியா விமானம் இழப்பு சந்திப்பு
பாகிஸ்தான் தனது வான்வெளி மூடப்பட்டதால், விமானக் கட்டண வருவாயில் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது. பாகிஸ்தானின் வான்வெளி தடை அந்த ஆண்டு வரை நீடித்தால் சுமார் 600 மில்லியன் டாலர் இழப்பு இந்தியாவுக்கு ஏற்படும் என்று ஏர் இந்தியா கணித்துள்ளது. வான்வெளி மூடல் ஏர் இந்தியாவின் தற்போதைய சவால்களை மேலும் சிக்கலாக்குகிறது. டாடா குழுமத்தின் கீழ் பல பில்லியன் டாலர் மதிப்பிலான மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், 2023-24 நிதியாண்டில் 520 மில்லியன் டாலர் நிகர இழப்பை சந்தித்துள்ளதாகவும், வருவாய் 4.6 பில்லியன் டாலர் என்றும் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பாதிப்பு
விமான தடை முழு இந்திய விமானப் போக்குவரத்துத் துறையையும், குறிப்பாக நீண்ட தூர வழித்தடங்களை பாதிக்கிறது. ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஏப்ரல் மாதத்தில் புதுடெல்லியிலிருந்து ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுமார் 1,200 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளன. இந்த விமானங்களுக்கு இப்போது மாற்று வழித்தடம் தேவைப்படுகிறது. இதனால் 1.5 மணி நேரம் வரை விமானப் பயண நேரத்தை நீட்டிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
போயிங் 737 தினப்படி இழப்பு 58,000 டாலர்
இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு சமீபத்தில் தடை விதித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கணிசமான நிதி இழப்பைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. முக்கிய வருவாய் ஆதாரமான ஓவர்ஃப்ளைட் கட்டணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் சிறிய மாடல்களில் ஒன்றான போயிங் 737-வகுப்பு விமானங்களிலிருந்து மட்டும் தினமும் குறைந்தது 58,000 டாலர் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு பொருளாதார இழப்பு:
பாகிஸ்தானின் வான்வெளி மூடப்பட்டதால் இந்திய விமான நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 306 கோடி கூடுதல் செலவை சந்திக்க வேண்டியது ஏற்படும் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
100 மில்லியன் டாலர் இழப்பை சந்தித்த பாகிஸ்தான்
வான்வெளி மூடப்பட்டதால் இஸ்லாமாபாத் நிதி நெருக்கடியை சந்திப்பது இது முதல் முறை அல்ல. 2019 ஆம் ஆண்டில், புல்வாமா தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு அதன் வான்வெளியை மூடியது, இதனால் 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தினமும் சுமார் 400 விமானங்கள் பாதிக்கப்பட்டன. இப்போது, இந்திய வான்வெளியைத் தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் தனது சொந்த விமானங்களை சீனா வழியாக மாற்றுவதால், கூடுதல் எரிபொருள் செலவுகள் மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் பொருளாதார தாக்கத்தை மோசமாக்க வாய்ப்புள்ளது.