
பலூசிஸ்தானில் நடந்த ஒரு பெரிய மோதலில் 13 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் (BLA) தெரிவித்துள்ளது. இந்த மோதலில் தங்கள் தரப்பிலும் மூன்று போராளிகள் பலியானதாகக் கூறியுள்ளது.
ஏப்ரல் 29ஆம் தேதி இரவில் பலூசிஸ்தானில் உள்ள துர்பத் மாவட்டத்தின் டன்னுக் பகுதியில் பி.எல்.ஏ. போராளிகளைச் சுற்றி வளைக்க முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்குடன் மோதல் நடந்ததாக பி.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிகாலை 3:30 மணிக்கு தொடங்கிய மோதல் சூரிய உதயம் வரை தொடர்ந்தது என்றும் போராளிகள் மூன்று மணிநேரம் தங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர் என்றும் பி.எல்.ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலோச் கூறியுள்ளார். இந்தச் சண்டையின்போது, பி.எல்.ஏ போராளிகள் பாகிஸ்தான் ராணுவ வாகனத்தைக் குறிவைத்துத்த தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 13 வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர் என்று பி.எல்.ஏ. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சங்கத் நபீல் என்கிற அலி, நூத் பண்டாக் என்ற சங்கத் ஃபெரோஸ் சர்பன், குரு என்ற சங்கத் முஹம்மது உமர் ஜகா உட்பட 3 பி.எல்.ஏ. போராளிகளும் பலியாகியுள்ளனர்.
முன்னதாக ஏப்ரல் 8ஆம் தேதி, பலுசிஸ்தானின் துக்கியின் கபோரி பகுதியில் பல மணிநேரம் நீடித்த மோதலில் பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் 9 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றனர். பலர் காயமடைந்தனர்.