
Pakistan Air Force shot down its own Plane: இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த மோதல் பல்வேறு நாடுகளின் தலையீட்டின்பேரில் முடிவுக்கு வந்தது. இந்த மோதலில் பாகிஸ்தான் இந்தியாவின் பொதுமக்களை தாக்கிய நிலையில், நமது முப்படைகளூம் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள், விமானப்படை தளங்களை குறி வைத்து தாக்கியது. பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இது ஒருபுறம் இருக்க, போரில் தங்கள் சொந்த நாட்டு விமானத்தையே பாகிஸ்தான் விமானப்படை சுட்டு வீழ்த்திய காமெடி கதை தெரியுமா?
1987ம் ஆண்டு நடந்த போர்
1987 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. பாகிஸ்தானின் F-16 விமானங்கள் மற்றொரு F-16 விமானத்தை நடுவானில் சுட்டு வீழ்த்தின. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் போரை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இது நடந்தது. சோவியத் விமானங்களுக்கும் பாகிஸ்தான் விமானப்படைக்கும் இடையே மோதல்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் நிகழ்ந்தன. ஆப்கானிஸ்தான் விமானப்படை சோவியத் யூனியனால் ஆதரிக்கப்பட்டது. அதே வேளையில் அமெரிக்காவின் உத்தரவின் பேரில் பாகிஸ்தானின் விமானப்படை, சோவியத் படைகளுக்கு எதிராகப் போராடியது.
எதிரி விமானம் என தவறாக கணித்த பாகிஸ்தான் விமானி
போர் உச்சக்கட்டத்தை நெருங்கிய வேளையில் பாகிஸ்தான் விமானப்படையின் 14வது படைப்பிரிவிலிருந்து இரண்டு F-16 ஜெட் விமானங்கள் ஆப்கானிஸ்தானில் குண்டுவீச்சுப் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு ரஷ்ய மிக்-23 விமானங்களை இடைமறிக்க உத்தரவிடப்பட்டன. பாகிஸ்தானிய F-16 விமானங்கள் MiG-23 அமைப்பில் ஈடுபட குறைந்த உயரத்தில் இருந்து ஏறியபோது, ஒரு முக்கியமான தவறு ஏற்பட்டது. அதாவது ஒரு பாகிஸ்தானிய விமானி மற்றொரு பாகிஸ்தானின் F-16 விமானத்தை எதிரி விமானம் என்று தவறாக கணித்தார்.
விமானி பிழைத்தார்; விமானத்தை காப்பாற்ற முடியவில்லை
இந்த நடவடிக்கைக்கு விங் கமாண்டர் அம்ஜத் ஜாவேத் தலைமை தாங்கினார். பாதிக்கப்பட்ட அந்த இரண்டாவது F-16 விமானத்தை லெப்டினன்ட் ஷாஹித் சிக்கந்தர் என்ற விமானி இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அம்ஜத் ஜாவேத்தின் விமானத்திலிருந்து ஏவப்பட்ட AIM-9P சைடுவைண்டர் ஏவுகணைஷாஹித் சிக்கந்தரின் F-16 விமானத்தின் வலது இறக்கையைத் தாக்கியது. ஏவுகணை F-16 விமானத்தைத் தாக்கிய உடனேயே விமானி ஷாஹித் சிக்கந்தர் கீழே குதித்து சரியான நேரத்தில் உயிரை காப்பாற்றிக் கொண்டாலும், F-16 விமானத்தை காப்பாற்ற முடியவில்லை. அது சுக்குநூறாக நொறுங்கியது.
பாகிஸ்தான் விமானியின் தவறுக்கு என்ன காரணம்?
இதில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அந்த நேரத்தில், F-16 உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானமாகக் கருதப்பட்டது. பல்வேறு அதிநவீன அம்சங்களுடன் எதிரி நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த விமானம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் நடந்த உடனேயே, ஆப்கானிஸ்தான் விமானப்படை தான் பாகிஸ்தானிய F-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக முதலில் கருதப்பட்டது.
பின்பு ஆய்வு செய்தபோது தான் பாகிஸ்தான் விமானியின் முட்டாள்தனமான தவறு காரணமாக இந்த சம்பவம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நட்பு மற்றும் எதிரி விமானங்களை வேறுபடுத்தும் ஜெட் விமானத்தின் சென்சார் செயல்படத் தவறிவிட்டதே இந்த தவறுக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.