
Shehbaz Sharif admitted defeat against India: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியா தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இறுதியாக ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது இந்தியா பாகிஸ்தானில் பல இடங்களைத் தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பேசும்போது ஷெபாஸ் ஷெரீப் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்ன சொன்னார்?
சமூகவலைத்தளத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மே 9 மற்றும் 10ம் தேதிக்கு இடைப்பட்ட அதிகாலை 2.30 மணியளவில் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தன்னை தொலைபேசியில் அழைத்து இந்தியா தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தெரிவித்தார் என ஒப்புக்கொள்கிறார். இந்திய விமானப்படை வீசிய ஏவுகணைகளில் ஒன்று நூர் கான் விமானப்படை தளத்திலும், சில மற்ற பகுதிகளிலும் விழுந்துள்ளன. ஷாபாஸ் ஷெரீப்பின் இந்த வீடியோவை பாஜக தலைவர் அமித் மாளவியா பகிர்ந்துள்ளார்.
பாஜக தலைவர் அமித் மாளவியா பகிர்ந்த வீடியோ
பாஜக தலைவர் அமித் மாளவியா, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, ''பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஜெனரல் அசிம் முனீர் அதிகாலை 2:30 மணிக்கு தன்னை அழைத்து, நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பல இடங்களில் இந்தியா குண்டுவீசித் தாக்கியதாகக் கூறியதாக ஒப்புக்கொண்டார். இதை மனதில் கொள்ளுங்கள். பாகிஸ்தானுக்குள் தாக்குதல்கள் நடந்ததாக பாகிஸ்தான் பிரதமர் நள்ளிரவில் விழித்தெழுந்தார். இது ஆபரேஷன் சிந்தூரின் அளவு, துல்லியம் மற்றும் துணிச்சலைப் பற்றி நிறைய கூறுகிறது'' என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பொய் அம்பலமானது
மேலும் இது தொடர்பாக பேசிய அமித் மாளவியா, ''பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவை வென்றாக கூறியிருந்தார். இப்போது பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வீடியோ மூலம் இஷாக் தார் மேற்கோள் காட்டிய செய்தி தவறானது என்பது தெரியவந்துள்ளது'' என்று கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி
பஹல்காமில் பயங்கரவாதிகள் 26 அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்று குவித்தது. இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால் இவை அனைத்தையும் முறியடித்த இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்து அந்த நாட்டின் பல்வேறு விமானப்படை தளங்களை தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.