
இந்தியா, ஜப்பான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதால், பழைய பகை மறைந்து, புதிய உறவு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் ஜப்பான் சென்றார். அவர் பிரதமராக பதவி ஏற்ற பின் அந்நாட்டுக்கு 2வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு, தலைநகர் டோக்கியோவில் இரு நாடுகளின் முக்கிய வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்தார். அப்போது அவர்களை இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து மோடி பேசினார். அதன்படி ஜப்பானுடன், அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது, அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்து போடாத, இந்தியாவுடன், ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம் செய்தது, உலக நாடுகள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2ம் உலகப் போரின்போது அணுகுண்டுகளால் ஜப்பான் கடும் உயிர் சேதத்தை சந்தித்தது. இதையொட்டி கடந்த 2011ம் ஆண்டில் புகுஷிமா அணுசக்தி நிலையத்தில் விபத்து ஏற்பட்டதாலும் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடாது என்று ஜப்பானில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், இந்தியா அமைதியான வழியில் அணுசக்தியை பயன்படுத்தி வருவதை சுட்டிக் காட்டியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மறைந்து, தற்போது நட்புறவு கொண்டுள்ளது.
ஜப்பானுடன் செய்து கொண்டுள்ள இந்த வரலாற்று பெருமைமிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் மூலம்
ஏற்கனவே, 48 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இணைவதற்கு இந்தியா பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பானுடன் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதால், அதற்கு பெரும் ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.
மேலும், வியன்னா நகரில் அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது வரவேற்கத்தக்கது.
ஜப்பான் தவிர அமெரிக்கா, ரஷியா, தென்கொரியா, மங்கோலியா, பிரான்ஸ், நமீபியா, அர்ஜெண்டினா, கனடா, கஜகஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இந்தியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.