நாட்டு மக்களிடம் அழுது மன்னிப்பு கேட்ட வட கொரிய அதிபர்..!! சர்வாதிகாரி நெஞ்சில் ஈரம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 13, 2020, 5:56 PM IST

நான் நாட்டு மக்களின் வளர்ச்சியில் தோல்வியுற்றிருந்தால் தயவுசெய்து நாட்டு  மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றபடி கிம் ஜாங் உன் கண் கலங்கினார். அப்போது அவர் கண்ணாடிகளை அகற்றி சிறிது நேரம் மௌனமாகக் கண்ணீர் வடித்தார்.


வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொழிலாளர் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு  விழாவில் நாட்டு மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியாக நடத்தியுள்ள உரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கல் நெஞ்சக்காரர் என பெயரெடுத்த அவர் நாட்டு மக்கள் மத்தியில் கண் கலங்கியிருப்பது சொந்த நாட்டு மக்களையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது. நாட்டு மக்களின் வளர்ச்சியில் நான் தோல்வியுற்றிருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என கிம் ஜாங் உன் கண் கலங்கியிருப்பது அந்நாட்டு மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளால் சர்வாதிகாரி என வர்ணிக்கப்படும், கிம் ஜாங் உன் பற்றி பல்வேறு விசித்திர தகவல்கள் வெளியாவது உண்டு.  மிகக் கொடூரமானவர், ஈவு இரக்கம் இல்லாதவர் என்பதைப் போன்று அவரைப்பற்றி வரும் உறுதிபடுத்தப்படாத பல தகவல்களை கேட்டு நம்மில் பலர் அவரை ஒரு கொடூர வில்லனாகவே உருவகப்படுத்தி வைத்துள்ளோம் எனபது மறுக்க முடியாத உண்மை. ஆனால் தற்போது அவரைப்பற்றி கிடைத்துள்ள தகவல் அது அத்தனைக்கும் எதிர்மறையானதாக உள்ளது.  நாட்டு மக்கள் மத்தியில் அவர் நிகழ்த்தியுள்ள உணர்ச்சி மிகுந்த உரை  கிம்மின் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

வட கொரிய தலைநகர் பியோ யாங்கில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது, இரவில் நடைபெற்ற நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் வரை நீடித்தது. அது உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த அணிவகுப்பில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் அதில் நாட்டின்  அதிபயங்கர ஏவுகணைகளும் அதில் இடம்பெற்றிருந்தன. அதில் மிக முக்கியமானது ராட்சத ட்ரக்கில் வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட மிகப் பிரம்மாண்டமான கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் எனப்படும் ஏவுகணை அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுமார் 12 ஆயிரத்து  874 கிலோமீட்டர் வரை பயணித்து இலக்கைத் தாக்கும் ஆற்றல் கொண்டதாகும். 

நீண்ட நாட்களாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். வடகொரியாவின் ராணுவ வலிமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்த அணிவகுப்பு அமைந்தது, ஏனெனில் அதில் அனைத்து வகையான ஆயுதங்களும் இடம்பெற்றிருந்ததே ஆகும்.  இதன் பின்னர் நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் நீண்ட உரை நிகழ்த்தினார். இந்நிலையில் அதில் ஏராளமான பள்ளி குழந்தைகளும் கலந்து கொண்டனர், அப்போது அவர் பேசியதாவது:  எனது வீரர்களின்  தியாகத்திற்கும், தைரியத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். நாம் பல கடினமான சவால்களை எதிர்கொண்டுள்ளோம்,  சமீபத்தில் நாடு புயல்களையும், கொரோனா வைரஸ் தொற்றுக்களையும் சந்தித்தது. இந்நேரத்தில் எங்களது வீரர்கள் எவ்வளவு கடினமாக உழைக்கின்றனர் என்பதையும் காண்பித்தனர், அவர்கள் நாட்டை புயல்களின் இருந்தும், வைரஸ்களில் இருந்தும் பாதுகாத்தனர். 

அதேநேரத்தில் நான் நாட்டு மக்களின் வளர்ச்சியில் தோல்வியுற்றிருந்தால் தயவுசெய்து நாட்டு  மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றபடி கிம் ஜாங் உன் கண் கலங்கினார். அப்போது அவர் கண்ணாடிகளை அகற்றி சிறிது நேரம் மௌனமாகக் கண்ணீர் வடித்தார். மேலும் தொடர்ந்த அவர், நம்நாட்டின் கடினமான உழைப்பினால் கொரோனா வைரஸ் தொற்று என்பது இல்லவே இல்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனாலும் நம்முடைய தகவல்களை தென்கொரியாவும், அமெரிக்காவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. ஒருவேளை எனது முயற்சிகளும், அர்ப்பணிப்பும் போதுமானதாக இருக்காது, ஆனால்  எனது நாட்டு மக்கள் என்னை எந்த அளவிற்கு நம்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும், வானத்தை விட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

இதுவரை நான் நாட்டு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக நான் வருத்தப்படுகிறேன். நாட்டை வழி நடத்திய என் தாத்தா மற்றும் தந்தைக்குப் பிறகு நாட்டை வழிநடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி, எனது முயற்சிகள் எப்போதும் நேர்மையாக இருக்கும் உங்கள் வாழ்வில் உள்ள சிரமங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது எனக் கூறி மீண்டும் கிம் தழுதழுத்த பேசினார். கிம்மின் இந்த உரையைக் கேட்ட அங்கிருந்த மக்கள் பலரும் உணர்ச்சிவயப்பட்டு கண்கலங்கி அழுதனர். 

 

click me!