ராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்ய நேரிடும்..!! வடகொரியா மிரட்டல்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 5, 2020, 10:22 AM IST
Highlights

பிரிவினைவாதிகளை 'பூமியின் புழு' என்றும் வர்ணித்துள்ள கிம்-யோ-ஜாங், இந்தவகை செயற்பாட்டாளர்கள் தாய்நாட்டை காட்டிக்கொடுத்ததாகவும், விமர்சித்துள்ளார்.

வட கொரிய அதிபர் கிம்-ஜாங்-உன்னின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தென் கொரிய நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் எல்லையைத் தாண்டி துண்டுப்பிரசுரங்களை வீசிய சம்பவத்தால்  வட கொரியா மிகுந்த கோபமடைந்துள்ளது . வட கொரியாவுக்கு எதிராக இந்நடவடிக்கையில் ஈடுபட்ட அச்செயற்பாட்டாளர்களை ஒடுக்காவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும் என்றும், வட கொரியா வியாழக்கிழமை தென் கொரியாவை அச்சுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், இருநாட்டு எல்லையில் கட்டப்பட்டுள்ள லைசான் அலுவலகமும் (தகவல் தொடர்பு அலுவலகம்) மூடப்படும் என வட கொரியா காட்டமாக எச்சரித்துள்ளது. இது குறித்து வட கொரிய அதிபர் கிம்-ஜாங்-உன்னின் சக்திவாய்ந்த தங்கை கிம்-யோ-ஜாங் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கைக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பதற்றமடைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், கிம்-ஜாங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் இடையே இராணுவ ஒப்பந்தம், இரு நாட்டுக்கு இடையே பரஸ்பர அமைதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மூன்று உச்சிமாநாடுகள் நடந்துள்ளன. இந்நிலையில், தென் கொரியாவின் சமூக சேவையாளர்களும், வட கொரியாவின் பிரிவினைவாதிகளும் நீண்ட காலமாக வட கொரியாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள் என்பதை நன்கு அறிவோம், இந்த ஆர்வலர்கள் வட கொரிய இறையாண்மை மற்றும் அணுசக்தி பற்றிய விவகாரங்களில் பைத்தியக்காரத்தனமாக செய்திகளை பிரச்சாரம் செய்து வருகின்றனர் என வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ கிம்-யோ-ஜாங் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது கிம்-யோ-ஜாங் தென் கொரியாவை எச்சரித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "தென் கொரியா மீண்டும் மீண்டும் சாக்குப்போக்கு கூறி, வட கொரியாவுக்கு எதிரான நிலைமையைக் கட்டுப்படுத்தாவிட்டால், நீங்கள் அதற்கு அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும்" என்றும் பிரிவினைவாதிகளை 'பூமியின் புழு' என்றும் வர்ணித்துள்ள கிம்-யோ-ஜாங், இந்தவகை செயற்பாட்டாளர்கள் தாய்நாட்டை காட்டிக்கொடுத்ததாகவும், விமர்சித்துள்ளார். மேலும் அவர்களின் முதலாளிகள் (தென் கொரியா அரசாங்கம்) இந்த அத்துமீறலை பொறுப்புணர்வுடன் சரிசெய்ய வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ள அவர்,  2018 ஆம் ஆண்டில் மூன் ஜே-இன் பியோங்சாங்கிற்கு வந்தபோது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பதற்றங்களைத் தணிக்க கையெழுத்திட்ட இராணுவ ஒப்பந்தத்தை நிராகரிக்க நேரிடும் எனவும் தனது அறிக்கையின் வாயிலாக யோ-ஜாங் அச்சுறுத்தியுள்ளார். அத்துடன் லைசான் அலுவலகமும் மூடப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

click me!