Singapore Changi Airport : அதிவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், திரும்பும் பக்கமெல்லாம் பல வகையில் மோசடி பேர்வழிகள் ஏமாறும் மக்களிடம் பெரும் தொகையை திருட காத்திருக்கின்றனர்.
சிங்கப்பூரில் நடக்கும் அனைத்து ஆன்லைன் மோசடி நடவடிக்கைகளையும் தடுக்க அந்நாட்டு அரசும், காவல்துறையும் மிகப்பெரிய அளவில் போராடி வருகின்றது. இந்நிலையில் உலக புகழ் பெற்ற சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் பெயரிலேயே ஒரு பெரிய மோசடி ஒன்று நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக நேற்று டிசம்பர் 18ஆம் தேதி மாலை வரை அந்த போலியான முகநூல் பதிவு ஆக்டிவாக இருந்ததுதான் ஹைலைட்.
என்ன நடந்தது?
ஏர்போர்ட்டில் மக்கள் தவற விட்டு செல்லும் லக்கேஜ்களை பொதுவாக ஒரு அறையில் பாதுகாத்து வைப்பது விமான நிலைய அதிகாரிகளின் ஒரு இயல்பான பழக்கம். இந்த சூழ்நிலையில் சாங்கி விமான நிலையத்தின் பெயரில் வெளியான ஒரு முகநூல் பதிவில், சாங்கி விமான நிலையம், 2023 ஆம் ஆண்டுக்கான விற்பனை தற்பொழுது துவங்கி உள்ளது.
தற்பொழுது எங்கள் சாங்கி விமான நிலையத்தில் மக்கள் பலர் விட்டு சென்ற அவர்களுடைய லக்கேஜ்களை அகற்றும் அவசரப் பணியில் நாங்கள் இருக்கின்றோம். சுமார் ஆறு மாத காலத்திற்கும் மேலாக யாரும் உரிமை கோராத லக்கேஜ்கள் தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. இதை விற்பதன் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்ய சாங்கி விமான நிலைய முடிவெடுத்துள்ளது.
ஆகவே இந்த லக்கேஜ்களை வெறும் 4 டாலர் செலுத்தி நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பை மக்கள் நம்பும் வகையில் ஒரு சில கமெண்ட்டுகளில் "நான் 4 டாலர் கொடுத்து சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலிருந்து ஒரு லக்கேஜை வாங்கினேன், அதற்குள் எனக்கு பல டாலர் மதிப்புள்ள பொருட்கள் கிடைத்தது" என்றெல்லாம் போலியான கமெண்ட்களும் இடப்பட்டு இருக்கின்றது.
சீனாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 111 பேர் பலி.. 230 பேர் படுகாயம்..
இதை நம்பி இந்த லிங்க்கை கிளிக் செய்பவர்கள் வேறு ஒரு பக்கத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்களுடைய கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்ட் விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் கோரப்படுகிறது. பின் ஒரு சில மணி நேரங்களில் அவர்களிடமிருந்து பெரும் தொகை வங்கிக் கணக்கில் இருந்து ஏமாற்றப்படுகிறது.
இந்த வகையில் தான் இந்த மோசடி நடந்து வருகிறது, இந்நிலையில் இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இது போன்ற தவறுதலான மற்றும் போலியான செய்திகளை நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என்றும் சாங்கி விமான நிலைய அதிகாரிகளும் சிங்கப்பூர் போலீசாரும் மக்களை எச்சரித்துள்ளனர்.