
பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, அதற்குப் பதிலடியாகக் காசா பகுதியில் உள்ள இலக்குகள் மீது 153 டன் எடையுள்ள குண்டுகளை இஸ்ரேல் வீசியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசிய நெதன்யாகு, "எங்கள் ஒரு கையில் ஆயுதமும், மறு கையில் அமைதிக்கான ஒப்பந்தமும் உள்ளது," என்று கூறினார். "நீங்கள் பலமானவர்களுடன் தான் அமைதி ஏற்படுத்த முடியும், பலவீனமானவர்களுடன் அல்ல. இன்று இஸ்ரேல் முன்பைவிட வலிமையாக உள்ளது," என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டு வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நேற்று (அக்டோபர் 19) அறிவித்தது. இதற்குப் பதிலடியாகவே காசாவில் உள்ள இலக்குகள் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியதாக இஸ்ரேல் கூறியது.
ஆனால், இந்தத் தாக்குதல் குறித்துத் தங்களுக்குத் தெரியாது எனப் பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ் மறுத்துள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலின் இந்த இராணுவ நடவடிக்கை மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.