சூரியனை போன்ற நட்சத்திரம் பிறப்பு: அரிய புகைப்படத்தை எடுத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

By Manikanda Prabu  |  First Published Sep 15, 2023, 4:58 PM IST

சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தின் பிறப்பு பற்றிய அரிய புகைப்படத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிடித்துள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி நிறுவனமான நாசா, ஐரோப்பா மற்றும் கனடாவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது. சுமார் ரூ.75,000 கோடிக்கும் அதிகமான மிகப்பெரிய பட்ஜெட்டுடன் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, பூமியிலிருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.

பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி, நாம் அறிந்திராத பல அரிய தகவல்களை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட பேரண்டங்களின் திரள்கள் அடங்கிய புகைப்படங்களை கடந்த ஆண்டு நாசா வெளியிட்டது. இதையடுத்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை கடந்த ஜனவரி மாதம் நாசா வெளியிட்டது.

Latest Videos

undefined

இந்த நிலையில், சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தின் பிறப்பு பற்றிய அரிய புகைப்படத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிடித்துள்ளது.

புதிதாகப் பிறந்த நட்சத்திரங்களின் மர்ம மண்டலத்தைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும் ஹெர்பிக்-ஹாரோ 211 (HH 211) இன் வசீகரமான படத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி  படம் பிடித்துள்ளது. அந்த புகைப்படம், கிளாஸ் 0 புரோட்டோஸ்டாரிலிருந்து வெளியேறும் ஒரு இளம் நட்சத்திரத்தை வெளிப்படுத்துகிறது. அந்த நட்சத்திரம் சூரியனைப் போன்றே உள்ளது. சில பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான அந்த நட்சத்திரத்தின் தற்போதைய நிறை 8 சதவீதம் என்ற அளவிலேயே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இளம் நட்சத்திரம், இறுதியில் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரமாக வளரும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. சூரியனை போலவே இருப்பதால் இதற்கு 'பேபி சன்' எனவும் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது பூமியிலிருந்து 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.
இந்த குழந்தை நட்சத்திரம் இருபுறமும் வாயுவை வெளியேற்றுகிறது. இது அருகிலுள்ள தூசி மற்றும் வாயுவை அதிக வேகத்தில் தாக்குகிறது. இதன் மூலம், தூசி மற்றும் வாயுவை வெப்பமாக்குவதுடன், வெவ்வேறு வண்ணங்களில் பிரகாசிக்க வைக்கிறது. இந்த ஒளிரும் பகுதிகள் ஹெர்பிக்-ஹாரோ பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை குழந்தை நட்சத்திரங்களை பற்றி தெரிந்து கொள்ள உதவும்.
ஹெர்பிக்-ஹாரோ பொருள்கள் விண்வெளியில் உள்ள புதிரான பகுதிகளாகும். அங்கு அதிக வேகம் கொண்ட பொருள் அதன் சுற்றுப்புறங்களுடன் தொடர்பு கொள்கிறது. இது அயனியாக்கம் செய்யப்பட்ட வாயுவின் ஒளிரும் பகுதிகளை உருவாக்குகிறது. HH 211 ஐப் பொறுத்தவரை, இந்த உமிழ்வுகள் கார்பன் மோனாக்சைடு, சிலிக்கான் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் போன்ற மூலக்கூறுகளிலிருந்து உருவாகின்றன.

இந்த வாஅனியல் ஜெட் நேராக இல்லாமல், பாம்பு போல வளைந்திருப்பதையும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புகைப்படம் காட்டுகிறது. இதன் மூலம் குழந்தை நட்சத்திரமானது உண்மையில் இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் ஒன்றையொன்று மிக வேகமாகச் சுழல்கிறது என அர்த்தப்படுத்தலாம். அதாவது பைனரி நட்சத்திரம் என்றழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தில் அனைத்து நட்சத்திரங்களும் இரண்டாகதான் இருக்கும். அதுதான் பைனரி ஸ்டார்ஸ் என்று அழைக்கப்படுகிறது. வானியல் ஜெட்டானது அவைகளின் இயக்கத்தைப் பின்தொடர்ந்து இருபுறமும் அசைகிறது.

அப்போ அதெல்லாம் உண்மையா? 3 விரல்கள் கொண்ட ஏலியன்ஸ்? - காட்சிக்கு வைக்கப்பட்ட 1000ம் ஆண்டு பழமையான சடலங்கள்!

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் மற்ற தொலைநோக்கிகளால் பார்க்க முடியாத விஷயங்களைப் பார்க்க முடியும். ஏனெனில் இது அகச்சிவப்பு ஒளி எனப்படும் infrared light-யை பயன்படுத்துகிறது. இந்த ஒளியை நமது கண்களால் பார்க்க முடியாது. ஆனால், குழந்தை நட்சத்திரத்தின் வழியாக அந்த ஒளியால் செல்ல முடியும். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியில் சிறப்பு கேமராக்கள் உள்ளன. அவை அகச்சிவப்பு ஒளியை, நாம் பார்க்கக்கூடிய வண்ணங்களாக மாற்றும்.

சூரியனை போன்றே உள்ள இந்த குழந்தை நட்சத்திரம் நாம் பார்க்கும் சூரியனை விட மிகவும் இளையது. நமது சூரியனுக்கு சுமார் 450 கோடி ஆண்டுகள் வயது என்றால், சில பத்தாயிரம் ஆண்டுகள் வயது கொண்டதே இந்த பேபி சூரியன். மேலும், நமது சூரியனை போன்றேதான் இதுவும் இருகிறது என்பதால், அடுத்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் நமது சூரியனை போன்றே இது உருமாற வாய்ப்புள்ளது. எனவே, இதனை ஆய்வு செய்வதன் மூலம் நாம் பார்க்கும் சூரியன் எப்படி உருவானது என்பதை கண்டறிய முடியும்.

ஆயினும்கூட, இந்த விண்ணுலகம் இன்னும் பல்லாயிரக்கணக்கான ரகசியங்களை தன்னுள் வைத்திருக்கிறது. புரோட்டோஸ்டார் மூலம் குறிக்கப்பட்டுள்ள, இன்னும் தீர்க்கப்படாத பைனரி நட்சத்திரம் அதன் மையத்தில் இருப்பதற்கான சாத்தியம் உள்ளிட்ட வான் அதிசயங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

click me!