உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி இருக்கும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 12,390 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் 414 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக கடந்த 14ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மே 3ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு நடைமுறை கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரிசோதனைகள் விரைவாக மேற்கொள்ள தேவையான ரேபிட், பிசிஆர் கருவிகள் போன்றவை குறைவாக இருப்பதால் தினமும் குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கே பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ள தேவையான கருவிகளை சீனாவிடம் இந்தியா ஆர்டர் செய்திருக்கிறது. அதன்படி சீனாவில் இருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிற்கு கிளம்பி இருப்பதாக தகவல் வந்து இருக்கிறது. அது இன்று மாலை இந்தியா வந்தடையும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்தியாவிற்கு அனுப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகளை அமெரிக்கா எடுத்துக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சீனாவிலிருந்து 6,50,000 கருவிகள் இந்தியாவிற்கு கிளம்பியுள்ளன. இதனிடையே கொரோனா பரிசோதனை பொருட்களை மாநிலங்கள் தன்னிச்சையாக கொள்முதல் செய்யவும் இறக்குமதி செய்யவும் வேண்டாம் என்றும் மத்திய அரசே இறக்குமதி செய்து உரிய அளவில் வழங்கும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திய தகவல் விமர்சனங்களை உண்டாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.