
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து நாடுகள் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்துக்கு மாறாக, அணு ஆயுதப்போட்டியில் ஈடுபடுகின்றன என மார்ஷல்ஸ் தீவு தொடர்ந்த வழக்கை சர்வதேச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
வழக்கு
கடந்த 2014-ம் ஆண்டு, சிறிய நாடான மார்ஷல்ஸ் தீவு நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. கடந்த 1968-ம் ஆண்டு அணு ஆயுத தடைப் பரவல் சட்டத்துக்கு மாறாக இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணு ஆயுதப் போட்டியில் ஈடுபடுகின்றன. போட்டியை கைவிட மறுக்கின்றன. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத தடைப்பரவல் சட்டத்தில் கையொப்பம் கூட இடவில்லை எனக் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது.
வரம்பு இல்லை
இந்த வழக்கு நேற்று 16 நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து நாட்டின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், ‘இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் வரம்புக்குள் வராது. ஆதலால் இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது’ என்று வாதிட்டனர்.
தள்ளுபடி
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ரூனி ஆபிரகாம், “ இந்த வழக்கின் விசாரணையை நாங்கள் ஏற்று நடத்த முடியாது. இது எங்கள் வரம்புக்குள் வராது. இந்த 3 நாடுகளுக்கும், மார்ஷல்ஸ் தீவுக்கும் இடையே இதற்கு முன் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அல்லது எந்தவிதமான இருதரப்பு ஒப்பந்தங்களும் இல்லை. ஆதலால், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி ெசய்தார்.
ஆய்வு
இது குறித்து மார்ஷல் தீவு நாட்டின் வழக்கறிஞர் பான் வான் டர் பீசன் கூறுகையில், “ நீதிமன்றம் எங்கள் மனுவை தள்ளுபடி செய்தது மிகுந்த வேதனையளிக்கிறது. நீதிமன்றத்தை தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்வோம்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக சீனா, பிரான்ஸ், இஸ்ரேல், வடகொரியா, ரஷியா, அமெரிக்கா, உள்ளிட்ட 9 நாடுகளுக்கு எதிராக இதுபோல் மார்ஷல்ஸ் தீவு தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா கட்டுப்பாடு
மார்ஷல்ஸ் தீவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் போது, 1946 முதல் 1958ம் ஆண்டுவரை 67 அணு குண்டுச்சோதனைகளை அமெரிக்கா நடத்தியது. குறிப்பாக ஹிரோஷிமாவில் வெடிக்கப்பட்டலிட்டில் பாய் அணுகுண்டைக் காட்டிலும் சக்திவாய்ந்த பிராவோ வெடிகுண்டை இங்கு சோதித்தது அமெரிக்கா.
மார்ஷல் தீவு நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் டோனி டிபுர்ம் நீதிமன்றத்தில் கூறுகையில், “ அணுகுண்டு சோதனையால் எங்கள் நாட்டில் உள்ள பல தீவுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மனிதர்கள் வாழமுடியாத பகுதியாக மாறிவிட்டன'' என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.