
ஐ.நா. சபையில் தீவிரவாதி பர்ஹான் வானியை புகழ்ந்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் ‘காஷ்மீர் மண்ணின் மைந்தன்’ என புகழாரம் சூட்டினார்.
பதற்றம்
காஷ்மீர் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 18-ந்தேதி தாக்குதல் நடத்தினர், அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளையும் , 7 முகாம்களையும் அழித்தனர். இந்த சம்பவங்களால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலை நிலவி வருகிறது.
போர்
இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு சூழல் குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தை பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று கூட்டினார். அதில் அவர் பேசியதாவது:
வறுமையை ஒழிக்க போரிடுவோம் வாருங்கள் என்று எங்களை அழைக்கும் இந்திய தலைவர்கள், வேளாண்மை நிலங்களில் ‘டாங்கி’களையும், பீரங்கிகளையும் ஓட்டுவதன் மூலம் அந்த குறிக்கோள் நிறைவேறாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
கடந்த மாதம் கேரள மாநிலத்தில் நடந்த பா.ஜனதா தேசியக் குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ வறுமை, வேலையின்மை, கல்வியின்மை உள்ளிட்ட சமூக அவலங்களை எதிர்த்து போரிட பாகிஸ்தான் தயாரா? இதில் வெல்லப் போவது யார் இந்தியாவா பாகிஸ்தானா என்று பார்க்கலாம்'' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு பதிலடியாக நவாஸ் ஷெரீப் இதை தெரிவித்தார்.
அமைதி
இந்தியாவை குற்றம்சாட்டி அவர் மேலும் பேசுகையில், “ இருதரப்பு அமைதிப்பேச்சு நடவடிக்கைகாக நாங்கள் ஒவ்வொரு முயற்சிகளையும் எடுத்தோம், ஆனால், இந்தியா எதையுமே நடத்தவிடவில்லை. எங்களின் முயற்சிகள் மீண்டும் மீண்டும் வீணாகிறது.
உரி ராணுவ முகாமில் நடந்த தாக்குதலில் முறையாக விசாரணை ஏதும் நடத்தாமல், சில மணி நேரங்களில் நாம்தான் காரணம் என இந்தியா குற்றம்சாட்டியது. உரிதாக்குதலில் பாகிஸ்தானை குற்றம்சாட்டுவதற்கு இந்தியாவுக்கு சில உள்நோக்கங்கள் உள்ளன. அதை வெளிப்படுத்தாமல் குற்றம்சாட்டியுள்ளது.
வலிமை
இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லை மீறி தாக்குதல் நடத்தியதால், இரு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் எந்த அடாவடிக்கும் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் முழுவலிமையுடன் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், திருப்பி தாக்குதல் நடத்தியது.
புகழாரம்
காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையிலும், அந்த மாநில மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் தீர்க்க வேண்டும். காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் பர்ஹான் வானி, மாநிலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடினான்.
பர்ஹான் வானி காஷ்மீர் மண்ணின் மைந்தன். காஷ்மீர் மக்களுக்கு சுதந்திரத்தையும், அவர்களுக்கு உரிமையையும் இந்தியா அளிக்க வேண்டும்.
திசைதிருப்ப
காஷ்மீரில் இந்தியா செய்து வரும் அடக்குமுறைகள், காட்டுமிராண்டித்தனங்களை உலகுக்கு மறைக்கவே நமக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இந்தியாவின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் முழு வலிமையுடன் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானைத் தவிர அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டனர்.