500 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து குங்குமப்பூ, மிளகுத்தூள் போன்ற மசாலா பொருட்களை ஸ்வீடன் அகழ்வாராய்ச்சியாளர்கள் பத்திரமாகக் கண்டெடுத்துள்ளனர்.
500 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வீடனின் பால்டிக் கடற்கரையில் மூழ்கிய அரச கப்பலின் சிதைவில், குங்குமப்பூ முதல் மிளகுத்தூள் வரை நன்கு பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மசாலாப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
டென்மார்க் மற்றும் நார்வேயை ஆட்சி செய்த மன்னர் ஹான்ஸ் என்பவருக்குச் சொந்தமான கிரிப்ஷண்ட் கப்பல் 1495ஆம் ஆண்டு அவர் ஸ்வீடனில் அரசியல் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது தீப்பிடித்து கடலில் மூழ்கியது.
undefined
1960களில் ஸ்போர்ட்ஸ் டைவர்ஸ் மூலம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கப்பலில் ஆங்காங்கே அகழ்வாராய்ச்சிகள் சமீபத்திய ஆண்டுகளில் நடந்தன. முந்தைய அகழ்வாராய்ச்சிகளில் மரம் போன்ற பெரிய பொருட்கள் மீட்கப்பட்டன. இப்போது லண்ட் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் விஞ்ஞானி பிரெண்டன் ஃபோலே தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், படகின் சேற்றில் புதைக்கப்பட்ட மசாலா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
"பால்டிக் விசித்திரமானது - இங்குள்ள குறைந்த ஆக்ஸிஜன், குறைந்த வெப்பநிலை, குறைந்த உப்புத்தன்மை, பல கரிம பொருட்கள் கொண்ட பால்டிக் பகுதியில் புதையுண்ட பொருட்கள் நன்கு பாதுகாக்கப்படுகின்றன. இதுபோன்ற அமைப்பு கடல் அமைப்பு வேறு எங்கும் இல்லை" என்று ஃபோலே கூறுகிறார். ஆனால் மசாலாப் பொருட்களைக் கண்டுபிடித்தது மிகவும் அசாதாரணமாக உள்ளது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
ஐரோப்பாவிற்கு வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குங்குமப்பூ அல்லது கிராம்பு போன்ற பொருட்களை செல்வந்தர்கள் மட்டுமே வாங்க முடியும் என்பதால், மசாலாப் பொருட்கள் உயர்ந்த அந்தஸ்தின் அடையாளமாக இருந்திருக்கும். ஸ்வீடனில் நடந்த கூட்டத்தில் மன்னர் ஹான்ஸ் கலந்துகொண்டபோது அவர்களுடன் இவை எடுத்துச்செல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது.
கண்டெடுத்த இவற்றை ஆய்வு செய்துவரும் லண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மைக்கேல் லார்சன் கூறுகையில், "குங்குமப்பூவை நாங்கள் கண்டறிந்த ஒரே தொல்பொருள் சூழல் இதுதான். எனவே இது மிகவும் தனித்துவமானது; மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்றார்.