
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆசியர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், லண்டன் மேயரான சித்திக்கானுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அதேசமயம், இந்தியாவின் தொழிலதிபர்கள் லட்சுமி மிட்டல், இந்துஜா சகோதரர்கள், நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுபாயி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
ஜி.ஜி.2 பவர் லிஸ்ட் எனும் அமைப்பின் சார்பில் இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற 101 ஆசியர்கள் குறித்து தேர்வு செய்து விருது வழங்கியது. இந்த பட்டியலை ஆசியன் மீடியா மற்றும் மார்கெட்டிங் குரூப்(ஏ.எம்.ஜி.) தயார் செய்தது.
இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி லண்டனில் உள்ள பார்க் பிளாசா ஓட்டலில் நேற்றுமுன்தினம் நடந்தது. இங்கிலாந்துக்கான இந்தியத்தூதர் தினேஷ் பட்நாயக் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
அதன்படி, லண்டன் மேயரும், பாகிஸ்தானைச் சேர்ந்த பஸ் டிரைவரின் மகனுமான சித்திக் கான்(வயத46) முதலிடத்தைப் பெற்றார். இவர் லண்டனின் முதல் முஸ்லிம் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் அமைச்சரவையில் புத்தாக்கம் மற்றும் திறன்மேம்பாட்டு அமைச்சராக இருந்த சஜித் ஜாவித் 2-ம் இடமும், சர்வதேச மேம்பாட்டு அமைச்சராக இருந்த இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவரான பிரீத்தி படேலுக்கு 3-ம் இடமும் கிடைத்தது.
நோபல் பரிசு வென்ற சர் வெங்கட்ராமன் ராம கிருஷ்ணனுக்கு 4-ம் இடமும், இந்துஜா குழுமத்தின் எஸ்.பி. இந்துஜாவுக்கு 6-வது இடமும் கிடைத்தது.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற தொழிலதிபரும், இந்தியாவைச் சேர்ந்தவருமான லட்சுமி மிட்டல் 7-வது இடத்திலும், பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், நோபல் பரிசு வென்ற மலாலா யூசுபாயி 10-ம் இடத்திலும் இடம் பெற்றனர்.
இங்கிலாந்தின் உயர்நீதிமன்றங்களில் புகழ்பெற்ற நீதிபதிகளில் ஒருவரான சர் ரபிந்திர சிங் 12-ம் இடத்தையும், வெளிநாடுவாழ் இந்தியரான சுவராஜ் பால் 42-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்துஜா குழுமத்தின் தலைவர் கோபி இந்துஜா கூறுகையில், “ காமென்வெல்த் நாடுகளுடன் இங்கிலாந்து சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளது. அந்த நாடுகளுடன் சிறப்பான முறையில் பணியாற்ற இங்கிலாந்து முயற்சிக்கும் என நம்புகிறோம். இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நீண்ட வரலாற்றும், வர்த்தக உறவுகள் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.