
அமெரிக்காவின் அடுத்த புகழ்பெற்ற அதிபராக ஹிலாரி கிளிண்டன் திகழ்வார். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கின்றன என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா புகழாரம் சூட்டினார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சியின் ஹிலாரியும் ஒருவொருக்கொருவர் கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹிலாரிக்கு ஆதரவாக அதிபர் ஒபாமா புளோரிடா நகரில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், “ அமெரிக்காவின் புகழ்பெற்ற அதிபராக ஹிலாரி கிளிண்டன் வருவார் என எனக்கு தெரியும். (முன்னாள் அதிபர் கிளிண்டன் மனைவி) ஹிலாரி நாட்டின் முதல்பெண்ணாக இருந்துள்ளார். எம்.பி.யாக இருந்துள்ளார், எனது அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். கடினமான, முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் எங்களுடன் ஹிலாரி இருந்துள்ளார்.
எந்த முடிவு மூத்த குடிமக்களையும், ராணுவ வீரர்களையும் பாதிக்கும் என்பது ஹிலாரிக்கு தெரியும். குழந்தைகளுக்கு எத்தகைய கல்வி தேவை என்பதும், எந்த வகையான சிறந்த பணியை மக்கள் எதிர் பார்த்துள்ளார்கள், ஓய்வுபெறும்போது கிடைக்கும் பலன்கள் ஆகியவை குறித்து ஹிலாரிக்கு நன்கு தெரியும்.
எத்தகைய கடினமான சூழலிலும் அமைதியாக இருந்து, பொறுமைகாத்து முடிவுகளை ஹிலாரி எடுப்பார் என்பது எனக்கு தெரியும்.
எவ்வளவு கடினமான முரன்பாடுகள் இருந்தாலும் கவலையில்லை, எத்தனைபேர் அவரை கீழே சாய்க்க முயல்வார்கள் என்றாலும் கவலையில்லை. ஹிலாரி யாரையும் சுட்டிக்காட்டமாட்டர், புகார் கூறமாட்டார். அவர் கடினமாக உழைத்து தனக்கான பணியை செய்து முடிப்பார்.
ஹிலாரிக்கு எதைப் பேச வேண்டும் என்பது தெரியும். அது குறித்து நன்கு தெரிந்துவைத்திருப்பவர். இப்போது நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஹிலாரி மட்டுமே சிறந்த அமெரிக்காவை உருவாக்க முடியும்.
இந்த ஆபத்தான உலகில் உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க ஒருவர் விரும்பினால், அவர் ஹிலாரியாகத்தான் இருக்க முடியும்'' எனத் தெரிவித்தார்.
டிரம்ப் மீது கடும் தாக்கு
டிரம்ப் குறித்து அதிபர் ஒபாமா பேசுகையில், “ தேர்தலில் தில்லுமுல்லு நடந்து ஹிலாரி வெற்றி பெற்றால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என எந்தவித ஆதாரமும் இல்லாமல் டிரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு பெரிய கட்சியைச் சேர்ந்தவர் இதுபோல் பேசுவது முதல்முறையாகும். பெரும்பாலான குடியரசுக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தேர்தலில் தில்லுமுல்லு நடக்க வாய்ப்பில்லை என்பது தெரியும்.
ஆனால், டிரம்பின் பேச்சு மிகவும் ஆபத்தானது. மக்களின் மனதில் சந்தேக விதைகளை டிரம்ப் தூவுகிறார். நம்முடைய ஜனநாயகத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளார்'' எனத் தெரிவித்தார்.