அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் வர்த்தகப் போரால் தென் கொரிய நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் சிலவற்றை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான ஆரம்பகட்ட பணிகளை சென்னையில் இருக்கும் கொரிய துணைத் தூதரகம் தற்போது மேற்கொண்டுள்ளது. தென்கொரிய துணைத் தூதரக அதிகாரி யூப் லீ கூறும்போது, இரண்டு இரும்பு மற்றும் எஃகு நிறுவனங்களிடமிருந்து தங்களுக்கு கோரிக்கைகள் வந்துள்ளது. அவற்றில் சில தொடக்க நிறுவனங்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வர விரும்புபவை என தெரிவித்துள்ளார்.
போஸ்கோ மற்றும் ஹூண்டாய் ஸ்டீல் தொழிற்சாலைகளை ஆந்திராவில் அமைக்க இந்திய அரசு ஆர்வமாக இருப்பதாகவும் அதற்காக 5,000 ஏக்கர் நிலம் மற்றும் துறைமுக இணைப்பைத் தேடுவதாக கூறியிருக்கும் லீ இரு நிறுவனங்களும் ஆந்திராவில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார். தற்போது தேவை குறைவாக இருப்பதால் இதுவரை இரு நிறுவனங்களிடமிருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை தவிர மேலும் பல சிறு தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. கொரோனா நோய் தொற்று காரணமாக அதில் தாமதம் ஏற்படக்கூடுமென லீ தெரிவித்திருக்கிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக எச்.டி.எஃப்.சி.யின் தீபக் பரேக் கூறும்போது ஆபத்தான மூலோபாயத்தின் ஒரு பகுதியாக சீனாவிலிருந்து வெளியேற ஆர்வமாக இருக்கும் ஜப்பானிய நிறுவனங்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். சீனாவில் இருந்து தங்கள் நிறுவனங்களை மாற்றுவதற்காக ஜப்பான் அரசு சுமார் 2 பில்லியன் டாலர் செலவழித்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்தவகையில் ஜப்பானிய நிறுவனங்கள் மலேசியா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்வதை விட இந்தியாவிற்கு வருவதற்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும். அதற்காக மாநில அரசுகள் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சிறப்பு மண்டலங்களை உருவாக்கிதர வேண்டும் என கூறியிருக்கிறார்