கென்னடி சென்டரில் டிரம்ப் பெயரா? கோபத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை ரத்து செய்த இசைக் கலைஞர்!

Published : Dec 28, 2025, 05:58 PM IST
Trump

சுருக்கம்

அமெரிக்காவின் கென்னடி கலை மையத்தில் டொனால்ட் டிரம்பின் பெயர் சேர்க்கப்பட்டதால், இசைக்கலைஞர் சக் ரெட் தனது கிறிஸ்துமஸ் ஜாஸ் இசை நிகழ்ச்சியை ரத்து செய்தார். இதற்குப் பதிலடியாக, மையத்தின் நிர்வாகம் அவரிடம் 1 மில்லியன் டாலர் நஷ்டஈடு கோரியுள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜான் எஃப். கென்னடி கலை மையத்தில் (Kennedy Center), அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல இசைக்கலைஞர் சக் ரெட் (Chuck Redd) தனது கிறிஸ்துமஸ் ஈவ் ஜாஸ் (Jazz) இசை நிகழ்ச்சியைத் திடீரென ரத்து செய்துள்ளார்.

இதற்குப் பதிலடியாக, கலை மையத்தின் தலைவர் ரிச்சர்ட் கிரெனெல், இசைக்கலைஞரிடம் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 8.4 கோடி) நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கென்னடி சென்டர் பெயர் மாற்றம்

வாஷிங்டனில் உள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மையத்தின் பெயருடன் டிரம்பின் பெயரையும் இணைக்க அதன் நிர்வாகக் குழு சமீபத்தில் முடிவு செய்தது. இதன்படி, அந்த மையத்தின் இணையதளம் மற்றும் கட்டிட முகப்பில் "The Donald J. Trump and The John F. Kennedy Memorial Center" எனப் பெயர் மாற்றப்பட்டது.

இந்த மாற்றத்தைக் கண்ட இசைக்கலைஞர் சக் ரெட், 'ஜாஸ் ஜாம்' (Jazz Jam) நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தார். "கட்டிடத்தில் பெயரின் மாற்றத்தைக் கண்டதும், இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்தேன்," என அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

நிர்வாகத்தின் கடும் கண்டனம்

மையத்தின் தலைவரும் டிரம்பின் ஆதரவாளருமான ரிச்சர்ட் கிரெனெல், இசைக்கலைஞர் சக் ரெட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "கடைசி நேரத்தில் நீங்கள் எடுத்த இந்த முடிவு, ஒரு லாப நோக்கமற்ற கலை நிறுவனத்திற்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் இந்த மையத்தைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சியைக் கௌரவிப்பதற்காகவே இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உங்களது செயல் ‘அரசியல் நாடகம்’, சகிப்புத்தன்மையற்ற செயல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டச் சிக்கல்

இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 1964-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்த மையம் முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் நினைவாக மட்டுமே இருக்க வேண்டும். இதில் வேறு எவருடைய பெயரையும் சேர்க்க சட்டத்தில் இடமில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கென்னடியின் உறவினரான கெர்ரி கென்னடி, டிரம்ப் பதவியில் இருந்து விலகியதும், இந்தப் பெயரைத் தான் நேரடியாக அகற்றப்போவதாகச் சபதம் செய்துள்ளார்.

முந்தைய நிர்வாகத்தை நீக்கிவிட்டு, டிரம்ப் தனது ஆதரவாளர்களைக் கொண்டு அமைத்த குழுவே இந்தத் தன்னிச்சையான முடிவை எடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பல ஆண்டுகளாக கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளின் மையமாகத் திகழ்ந்த கென்னடி சென்டர், தற்போது அமெரிக்காவின் அரசியல் மோதல் களமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

2 விநாடிகளில் 700 கிமீ வேகம்.. உலகின் அதிவேக ரயில்.. சீன மேக்லெவ் 700 கிமீ சாதனை
இரவு நேரத்தில் நிலநடுக்கம்.. அலறியடித்து வெளியே ஓடிய மக்கள்.. நடுங்கிய தைவான்.. என்ன ஆச்சு?