
சிரியாவின் ஹோம்ஸ் (Homs) நகரில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹோம்ஸ் நகரின் வாடி அல்-தஹாப் (Wadi al-Dahab) பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் மசூதியில் மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது. இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதத் தாக்குதல்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில், மசூதியின் சுவர்கள் துளையிடப்பட்டும், தரைவிரிப்புகள் மற்றும் புத்தகங்கள் சிதறிக் கிடப்பதும் தெரிகிறது.
குண்டுவெடிப்பு நடந்த வாடி அல்-தஹாப் பகுதி, சிரியாவின் சிறுபான்மையினரான அலவைட் (Alawite) சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியாகும்.
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத் இந்த அலவைட் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2024-இல் அசாத் ஆட்சி வீழ்ந்த பிறகு, சிரியாவில் இஸ்லாமிய அமைப்புகள் ஆட்சியைக் கைப்பற்றின. அதன்பின்னர், அலவைட் சமூகத்தினர் குறிவைத்துத் தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் டமாஸ்கஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 25 பேர் பலியானார்கள். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு ஒரு வழிபாட்டுத் தலத்தில் நடக்கும் இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும்.
"பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அதன்பின்னர் அந்தப் பகுதியே பீதியில் உறைந்து போனது. ஆம்புலன்ஸ் சைரன் சத்தங்கள் மட்டுமே கேட்கின்றன. யாரும் வீட்டை விட்டு வெளியே வரத் துணியவில்லை," என்று அந்தப் பகுதிவாசி ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த மோதல்களில் 1,400-க்கும் மேற்பட்ட அலவைட் சமூகத்தினர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஹோம்ஸ் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சமீபத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களை நடத்தினர். இந்தச் சூழலில் தற்போது மசூதியில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் அந்த சமூகத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அந்த மசூதியைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.