இரவு நேரத்தில் நிலநடுக்கம்.. அலறியடித்து வெளியே ஓடிய மக்கள்.. நடுங்கிய தைவான்.. என்ன ஆச்சு?

Published : Dec 28, 2025, 06:39 AM IST
Earthquake

சுருக்கம்

தைவானில் சனிக்கிழமை இரவு ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் தைப்பே உள்ளிட்ட பல நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தைவான் தீவில் நேற்று (சனிக்கிழமை) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக தைவான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டதால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். 

குறிப்பாக வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் யிலான நகரத்திலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பூமியின் அடியில் சுமார் 73 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு பதிவானது. 

இந்த நிலநடுக்கம் தலைநகர் தைப்பே உள்ளிட்ட பல நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கச் செய்யப்பட்டது. சில இடங்களில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே தைவான் தேசிய தீயணைப்பு துறை மீட்புப் பணிகள் தொடங்கியுள்ளன. சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இருப்பினும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வாரத்தில் தைவான் சந்தித்த இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும். ஏற்கனவே புதன்கிழமை 6.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அதிர்வு மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியது. 

சமூக வலைதளங்களில் கட்டிடங்கள் குலுங்கும் வீடியோக்கள், மக்கள் அலறியடித்து வெளியே ஓடும் காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன. இரண்டு பாறைத் தட்டுகள் சந்திக்கும் பகுதியில் தைவான் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த காலத்திலும் தைவான் கடுமையான நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது. 

2016ஆம் ஆண்டு தெற்கு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல் 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.3 அளவிலான நிலநடுக்கம் 2,000க்கும் மேற்பட்ட உயிர்களை பலியாக்கியது. தற்போதைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சிரியா மசூதியில் பயங்கரம்! தொழுகையின் போது நடந்த கொடூர தாக்குதல்.. 8 பேர் உடல் சிதறி பலி!
கொடூரம்.. தொழுகையில் ஈடுபட்ட பாலஸ்தீனியர் மீது வாகனத்தை ஏற்றிய இஸ்ரேலிய வீரர்!