இந்தியாவில் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு கேலிக்குரிய பொருளாக கருதப்படுகிறார் என கனடா எதிர்க்கட்சித் தலைவர் விமர்சித்துள்ளார்
இந்தியா உடனான இராஜதந்திர உறவுகளைக் கையாள்வது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அந்நாட்டு எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான ப்யீர் பொய்லிவ்ரே கடுமையாக சாடியுள்ளார்.
நேபாள ஊடகமான நமஸ்தே ரேடியோ டொராண்டோவுக்கு அளித்த பேட்டியில் பொய்லிவ்ரே இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவில் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு கேலிக்குரிய பொருளாகக் கருதப்படுகிறார் எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.
கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஜஸ்டின் ட்ரூடோ தொழில்முறையற்ற திறமையற்றவர் என்று கூறினார். இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து பெரிய சக்திகளுடனும் கனடா இப்போது பெரும் சர்ச்சையில் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவிற்கு இந்திய அரசாங்கத்துடன் ஒரு தொழில்முறை உறவு தேவை என்றும், தான் பிரதமரானால் அதை மீட்டெடுப்பேன் என்றும் ப்யீர் பொய்லிவ்ரே தெரிவித்துள்ளார். “பூமியின் மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியா. நமது கருத்து வேறுபாடுகள் மற்றும் ஒருவருக்கொருவர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. ஆனால் நாங்கள் ஒரு தொழில்முறை உறவைக் கொண்டிருக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.
கனடாவின் வெளிநாட்டு உறவுகளை விமர்சித்த அவர், கனடாவில் இந்து கோவில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்தார். “இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் அனைத்தையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்துத் தலைவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், பொது நிகழ்ச்சிகளில் இந்திய தூதர்களிடம் காட்டப்படும் எதிர்ப்பு ஆகியவை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நான் அதைத் தொடர்ந்து எதிர்ப்பேன். இந்து கோவில்களை தாக்குபவர்கள் கிரிமினல் வழக்குகளை சந்திக்க வேண்டும்.” என்றார்.
காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா பிரஜையான அவரது கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கான தொடர்புகள் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், கனடாவின் குற்றச்சாட்டுக்ளை அபத்தமானது என கூறிய இந்தியா, அந்நாட்டு தூதர்களை இந்தியாவில் இருந்து வெளியேற உத்தரவிட்டது. அதேபோல், கனடாவும் இந்திய தூதர்களை வெளியேற்றியது.
தூதரக அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு வெளியேற்றப்படாத அதிகாரிகளின் பொறுப்புகள் நீக்கப்படும் என்றும் இந்தியா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த கடனாவின் 41 தூதரக அதிகாரிகளும், 42 உதவியாளர்களும் என அனைவருமே நேற்று முன் தினம் திரும்ப பெறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.